வாய்க்காலில் வேன் கவிழ்ந்து சிறுவர்கள் உள்பட 11 பேர் காயம்

வேளாங்கண்ணி அருகே வாய்க்காலில் வேன் கவிழ்ந்து கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2021-07-24 14:45 GMT
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணி அருகே வாய்க்காலில் வேன் கவிழ்ந்து கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.
வேன் கவிழ்ந்தது
கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிழக்கு மீனா தெருவை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு ஒரு வேனில் சுற்றுலா வந்தனர். வேனை அதே பகுதியை சேர்ந்த அஜய் (வயது 25) என்பவர் ஓட்டி வந்தார். நாகூர் தர்காவுக்கு சென்று விட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது கருவேலங்கடை அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்தது. அப்போது வேனில் இருந்தவர்கள் காயம் அடைந்து அலறினர்.
11 பேர் காயம்
இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேனில் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த இனாமுள் உசேன் (17), சாலிஹாத் பேகம் (50), பாரிஸ் (14), டானிஷ் அகமது (7), அப்துல்லா (12), சித்திகா பேகம் (45), பவுசியா பேகம் (35), அஸ்ரா (9), மெகராஜ் பேகம் (53), நஸ்மா ஜாஸ்மின் (15) மற்றும் வேன் டிரைவர் அஜய் ஆகிய 11 பேரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபர்களை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும் செய்திகள்