கிணற்றில் மூழ்கி சிறுவன் சாவு

தேனி அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2021-07-24 13:29 GMT
தேனி:

தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி இந்திராகாலனியை சேர்ந்தவர் திரவியம். இவர், மின் வாரியத்தில் தற்காலிக தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மகன் அகிலேஷ் (வயது 8). இவன், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். சிறுவனின் தாத்தா மூர்த்தி, அதே ஊரில் உள்ள ஒரு தோட்டத்தில் கூலி வேலை பார்க்க நேற்று சென்றார். 

அப்போது அவருடன் சிறுவனும் சென்றான். அங்குள்ள ஒரு கிணற்றின் அருகில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். 

சிறிது நேரத்தில் சிறுவனை, மூர்த்தி தேடியபோது அவனை காணவில்லை. ஆனால் கிணற்றின் அருகில் சிறுவனின் உடைகள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் கிணற்றில் குளிப்பதற்காக இறங்கிய சிறுவன், தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்று அவர் சந்தேகம் அடைந்தார்.

 இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் தேனி தீயணைப்பு படையினரும் அங்கு சென்றனர். பின்னர் கிணற்றுக்குள் இறங்கி தீயணைப்பு படையினர் தேடினர். 

கிணற்றுக்குள் கிடக்கும் உடல்களை மீட்க பயன்படுத்தும் பாதாள கரண்டியைப் பயன்படுத்தி உடலை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர தேடுதலுக்கு பிறகு சிறுவன் பிணமாக மீட்கப்பட்டான். 

போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்