வாணியம்பாடி அருகே; சூதாட்டத்தில் வென்ற ரூ.25 லட்சத்தை பைனான்சியரிடம் பறித்து சென்ற கும்பல்

வாணியம்பாடி அருகே சூதாட்டத்தில் வென்ற ரூ.25 லட்சத்தை பைனான்சியரிடம் ஒரு கும்பல் நள்ளிரவில் சினிமா பாணியில் கொள்ளையடித்து சென்றது.

Update: 2021-07-24 13:00 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே சூதாட்டத்தில் வென்ற ரூ.25 லட்சத்தை பைனான்சியரிடம் ஒரு கும்பல் நள்ளிரவில் சினிமா பாணியில் கொள்ளையடித்து சென்றது. 

பைனான்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 45). பைனான்சியரான இவர் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். 

நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலிருந்து காரில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

வாணியம்பாடி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வளையாம்பட்டு மேம்பாலத்தில் அவரது கார் சென்று கொண்டிருந்தது.

கும்பல் மடக்கியது

 அப்போது அவர்களை பின்தொடர்ந்து மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென ஞானசேகரன் காரை மேம்பாலத்தில் மடக்கி நிறுத்தியது. 

அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய அந்த கும்பல் காரை உடைத்து ஞானசேகரனை தாக்கியது.
அந்த கும்பல் ஞானசேகரன் சூட்கேசில் வைத்திருந்த ரூ.25 லட்சத்தை எடுத்துகொண்டு தாங்கள் வந்த காரில் தப்ப முயன்றது. 

உடனே ஞானசேகரனுடன் வந்த அவரது நண்பர்கள் அந்த கும்பலை அவர்களது காரில் ஏறவிடாமல் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் நடுரோட்டில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 கார்களின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன.

அதே நேரத்தில் சுதாரித்த ஞானசேகரனின் நண்பர் ஒருவர் கொள்ளையர்கள் வந்த காரில் இருந்த சாவியை எடுத்து மேம்பாலத்தில் இருந்து 100 அடி பள்ளத்தில் வீசி விட்டார்.

பணத்துடன் ஓட்டம்

இதனால் காரில் தப்பமுடியாது என்பதை உணர்ந்த கொள்ளை கும்பல் போலீசார் வருவதற்குள் அங்கிருந்து ரூ.25 லட்சத்துடன் ஓட்டம் பிடித்தது. 

இது குறித்து வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு ஞானசேகரன் தகவல் கொடுத்தார். ரூ.25 லட்சத்தை ஆயுதங்களுடன் வந்து மோதி கொள்ளையர்கள் பறித்து சென்றதை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனி செல்வம், சரவணன் ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கொள்ளையர்கள் விட்டுச்சென்ற காரில் வழக்கறிஞர் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. மேலும் பதிவு எண்ணை பார்த்தபோது அதில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கொண்ட 2 பதிவு எண்கள் பொருத்திய ‘நம்பர் பிளேட்’ இருந்தது.
காவலர் தொப்பி

கொள்ளையர்கள் வந்த காரை கைப்பற்றிய காவல்துறையினர் அதிலிருந்து பேன்கார்டுகள், ஆதார் அட்டைகள் மற்றும் காவலர்கள் பயன்படுத்தும் போலீஸ் தொப்பி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். 

பைனான்சியர் ஞானசேகரன் குடியாத்தம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் வென்ற ரூ.25 லட்சத்்தை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் வந்தபோதுதான் பின் தொடர்ந்து வந்த கும்பல் இதனை பறித்து சென்றது. 

இது குறித்து ஞானசேகனரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தப்பி ஓடிய கொள்ளையர்களை அடையாளம் கண்டு அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

மேலும் சட்டவிரோதமாக சூதாட்டம் நடந்துள்ளதால் அதில் ஈடுபட்டவர்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்