வேலைத்திட்டம்

விவசாயப் பணிகளில் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களை முழுமையாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-07-24 11:47 GMT
போடிப்பட்டி
விவசாயப் பணிகளில் 100  நாள் வேலைத் திட்டப் பணியாளர்களை முழுமையாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்
கிராமப்புறங்களில் அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமாகும். இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படுகிறது என்பதால் இது நூறு நாள் வேலை என்று கிராம மக்களால் அழைக்கப்படுகிறது. கிராமப் புறங்களிலுள்ள நீர்நிலைகளை மேம்படுத்துதல், காடு வளர்ப்பு, மழைநீர் வடிகால்கள் பராமரிப்பு, கட்டிடப் பணிகள், சாலைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
 இதுதவிர வரப்பு அமைத்தல் உள்ளிட்ட ஒருசில விவசாயப் பணிகளிலும் 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். தற்போது ஊராட்சிப்பகுதிகளில் மட்டுமே செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். ஒரு குடும்பத்துக்கு 100 நாள் வேலை என்பதை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் விடுக்கப்படுகிறது.ஆனால் 100 நாள் வேலைத் திட்டத்தால் விவசாயப் பணிகளுக்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தின் பயனாளிகளை முழுமையாக விவசாயப் பணிகளில் ஈடுபடுத்த முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது
தனி அதிகாரி
தற்போது விவசாயத்துக்கென தனி பட்ஜெட் வெளியிடத் தீர்மானித்திருக்கும் அரசு கூலித் தொழிலாளர் தட்டுப்பாடு பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.விதைப்பு முதல் அறுவடை வரை அனைத்துவிதமான விவசாயப் பணிகளுக்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்களைப் பயன்படுத்தத் திட்டம் வகுக்க வேண்டும். தற்போது முழுமையாக ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுத்தப்படும் நூறு நாள் வேலையை வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறையுடன் இணைக்க வேண்டும். இந்த மூன்று துறைகளையும் ஒருங்கிணைத்து 100 நாள் வேலையைத் திட்டமிடும் வகையில் தனி அதிகாரிகளை நியமிக்கலாம்.
அவர்களிடம் விவசாயிகள் தங்களுக்கான பணியாளர்கள் தேவை குறித்து பதிவு செய்து கொள்ளலாம் அல்லது உழவன் செயலி போன்றவற்றின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு விவசாயப் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் தொழிலாளர்களுக்கான சம்பளத்தில் பாதியை விவசாயிகளிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.அத்துடன் வேலைகளை கண்காணிக்கும் பணிகள் முழுமையாக விவசாயியைச் சார்ந்ததாகவே இருக்க வேண்டும்.விவசாயப் பணிகள் இல்லாத நாட்களில் அவர்களுக்கு மற்ற பணிகளை வழங்கலாம்.இதன்மூலம் பயனாளிகளுக்கு 100 நாள் மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பை வழங்க முடியும்.விவசாயிகளுக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறை தீரும்.
விவசாயத்தின் வேர்கள்
தற்போது அரசு சாகுபடிப் பரப்பை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.நிலத்தில் இறங்கிப் பாடுபடுவதற்கு உழைப்பாளிகள் இல்லாமல் இது சாத்தியமில்லை.பருவமழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் விதைப்பதற்கு ஆள் கிடைக்காமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.ஆனால் 100 நாள் வேலைப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டிய கட்டாயத்தால் அதிகாரிகள் அவர்களிடம் கெடுபிடி செய்யும் நிலை உள்ளது.இன்றைய நிலையில் விவசாய மேம்பாட்டுக்கு செய்ய வேண்டிய முதல் கட்டப் பணி தொழிலாளர் பற்றாக்குறைக்குத் தீர்வு காண்பதுதான்.
இ்வ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.

----

மேலும் செய்திகள்