தமிழில் கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்படும்

தமிழில் கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Update: 2021-07-24 11:39 GMT
திருப்பூர்
தமிழில் கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  கூறினார்.
கோவில்களில் அமைச்சர்கள் ஆய்வு
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், அவினாசி அவினாசிலிங்கேஸ்வரர் கோவில், கருவலூர் மாரியம்மன் கோவில், திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவ பெருமாள் கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் உடனிருந்தார்.
திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி ஆகியோர் உடன் இருந்தனர்.
குடமுழுக்கு
ஆய்வு குறித்து அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது
தமிழகத்தில் உள்ள கோவில்களில் ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். குடமுழுக்குக்கு எடுத்துக்கொண்ட கோவில் பணிகள், தொய்வடைந்த பணிகள் தொடர்பாகவும், கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் ஆகியோரை  சந்தித்து  குறைகள் கேட்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு பணிகளை விரைவுபடுத்தவும், ஏற்கனவே நடந்து வரும் பணிகளுக்கு தேவையான நிதி மற்றும் நன்கொடையாளர்கள் பற்றிய விவரங்களும் ஆய்வு செய்யப்பட்டது.
கோவில் நிலங்களில் முறையாக வாடகை செலுத்தாமல் இருப்பவர்கள் குறித்தும், ஆக்கிரமிப்பு நிலங்களை கண்டறிந்து அதுகுறித்த நடவடிக்கைகளை கள ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் சேலம், கோவை, திருப்பூர் மாவட்டத்தில் கோவில்களில் ஆய்வு நடந்து வருகிறது.
ஒரு கால பூஜை
தமிழகத்தில் கோவில்கள் அனைத்தும் தூய்மை நிறைந்த இடமாக மாற்றவும், நந்தவனம், திருத்தேர் பழுதடைந்தால் அவற்றை சரி செய்யும் பணியும், கோவில் தெப்பங்குளங்களில் தண்ணீர் விடும் முயற்சிகள், கும்பாபிஷேகம் நடத்த வேண்டிய கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளது. முதல்கட்டமாக  இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணிகளை முடுக்கி விடுவதற்காக மாவட்டந்தோறும் ஆய்வு நடக்கிறது.
எந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு, வருமானம் தரக்கூடிய கோவில்கள், வருமானம் இல்லாத கோவில்கள் என்ற நிலையை மாற்றி அனைத்து கோவில்களிலும் ஒருகால பூஜை நடத்தப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பொற்கால ஆட்சி
அதன்படி இந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் கோவில்களில் கும்பாபிஷேகம் மற்றும் பணிகள் நடைபெறும். மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி என்பது ஆன்மிக மக்களுக்கு பொற்கால ஆட்சி என்று இருக்கும் அளவுக்கு இந்து சமய அறநிலையத்துறை பணிகள் நடக்கும். அறநிலையத்துறை இடம் என்று தெரியாமல் ஆக்கிரமிப்பு செய்தாலும் தவறு தான். இந்த ஆட்சியை பொறுத்தவரை சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்துக்கு உட்படாத யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்
நல்ல வசதி படைத்தவர்கள், கோவில் இடங்களை தங்கள் சுயலாபத்துக்காக பயன்படுத்துபவர்கள் மீது முதல்கட்டமாக தீவிர நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கோவில் நிலங்கள் குறித்து தினமும் 2 இடங்களிலாவது ஆக்கிரமிப்புகளை இந்து சமய அறநிலையத் துறையினர் அகற்றி வருகிறார்கள். கடந்த 75 நாட்களில் இதுரை இல்லாத அளவுக்கு அதிகப்படியான இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்றி இருக்கிறது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தில் படிப்படியாக சிறிய கோவில்களில் நியமிக்கப்படும் பணிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். 
அவினாசிலிங்கேஸ்வரர் கோவில்
முன்னதாக அவினாசி அவினாசிலிங்கேசுவரர் கோவிலுக்கு அமைச்சர்  சேகர்பாபு  அவருக்கு கோவில் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து கோவிலில் சாமிதரிசனம் செய்த அமைச்சர்,  கோவில்தல வரலாறு குறித்து சிவாச்சாரியர்களிடம் கேட்டறிந்தார்.  கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தை பார்வையிட்டு குளத்தில் நிறைய தண்ணீர் நிரப்பி பராமரிக்குமாறும் கோவில் வளாகம் முழுவதும் பராமரித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டார். முற்காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட நிலையில் கோவிலில் கஞ்சி தொட்டி வைத்து அனைவருக்கும் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது. அந்த கஞ்சி தொட்டியை அமைச்சர் பார்வையிட்டரர். பின்னர் தமிழகத்தில் 3  வது பெரிய தேரான அவினாசிலிங்கேசுவரர் தேரை பார்வையிட்டு, தேருக்கு பாதுகாப்பு அவசியம் குறித்து தரமான செட் அமைக்குமாறு அறிவுறுத்தினார். 
கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை
இந்த கோவிலுக்கு  கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சாமி  தரிசனம் செய்ய வருவதால் அவர்கள் தங்குவதற்கு வசதியாக கோவில் நிலத்தில் நவீன வசதிகளுடன் யாத்திர நிவாஷ் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 13 ஆண்டுகள் கடந்த நிலையில் உடனடியாக அவினாசிலிங்கேசுவார் கோவில் மற்றும் ஆகாசராயர் கோவிலுக்கும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
அதற்கு உரிய நடவடிக்க எடுப்பதாகவும், மேலும் தமிழில் கோவில்களில் குடமுழுக்கு நடத்தவும், கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  அமைச்சர் உறுதிகூறினார். 
ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நடராஜன், தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு. நாகராஜன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார், இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
---------
----
----------------
---
அவினாசிலிங்கேசுவார் கோவிலில் அமைச்சர் சாமி தரிசனம் செய்த போது எடுத்த படம்
-----
குறிப்பு படம் உண்டு.

----
Reporter : M.Sivaraj_Staff Reporter  Location : Tirupur - Tirupur

மேலும் செய்திகள்