ஊர்க்காவல் படை வீரர் மூச்சுத்திணறி திடீர் சாவு: கொரோனா தடுப்பூசி போட்ட மறுநாளே பரிதாபம்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாளே ஊர்க்காவல் படை வீரர் மூச்சுத்திணறலால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பெரம்பூர்,
சென்னை முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வந்தவர் கோகுல் (வயது 47). நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மனைவியை பிரிந்து பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள போலீஸ் குடியிருப்பில், போலீசான தனது தங்கை அருணா என்பவரது வீட்டில் தங்கி பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் காலை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற முகாமில் கோகுல், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பின்னர் வழக்கம்போல் பணி முடிந்ததும் இரவில் வீட்டுக்கு வந்து தூங்கினார்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென கோகுலுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே கோகுல் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகே அவரது சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாளே ஊர்க்காவல் படை வீரர் முச்சுத்திணறி இறந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.