காஞ்சீபுரத்தில் வீட்டுமனை அளிப்பதாக ரூ.2¾ கோடி மோசடி- ரியல் எஸ்டேட் அதிபர் கைது
வீட்டுமனை அளிப்பதாக கூறி ரூ.2 கோடியே 80 லட்சம் வரை மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவில் மாட வீதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார். காஞ்சீபுரம் வையாவூர், சிறுவள்ளூர் போன்ற பகுதிகளில் குறைந்த விலையில், தவணை முறையில் பணம் செலுத்துவோருக்கு வீட்டுமனை அளிப்பதாக கூறி ஒரு நபரிடம் ரூ.56 ஆயிரம் வரை வசூலித்தார்.
மேலும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் ரூ.56 ஆயிரம் செலுத்தினால் அவர்களுக்கு அரை கிரவுண்ட் நிலம் அளிப்பதாக வாக்குறுதியை ஸ்ரீதர் அளித்தார். இதனை நம்பி காஞ்சீபுரம், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பலர் பணம் செலுத்தினர்.
தன் மீது நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக ஸ்ரீதர், சிலருக்கு மட்டும் வீட்டுமனை கொடுப்பதை போல் அதற்கான பத்திரங்களையும், சான்றிதழ்களையும் கொடுத்துள்ளார்.
பணம் செலுத்திய அனைத்து நபர்களுக்கும் அவர்கள் நம்புவதற்காக பாண்டு பத்திரத்தில் கையொப்பமிட்டு ெகாடுத்துள்ளார். மேலும் அதிகப்படியான ஆட்களை சேர்த்தால் வாடிக்கையாளர்களை முகவர்களாக மாற்றி அவர்களுக்கு உரிய சலுகைகள் அளிக்கப்படும் என்ற வாக்குறுதியையும் கொடுத்தார்.
இதனால் பல வாடிக்கையாளர்கள் முகவர்களை போல் செயல்பட்டு தங்களுடைய உறவினர்கள், உடன் பணிபுரிபவர்கள், தெரிந்தவர்கள் என பல நபர்களை இதில் சேர்த்து விட்டுள்ளனர்.
இவ்வாறு வீட்டுமனை பெற பொதுமக்கள் செலுத்திய ரூ.2 கோடியே 80 லட்சத்தை ரியல் எஸ்டேட் அதிபர் ஸ்ரீதர் மோசடி செய்ததாக தெரிகிறது. இதை அறிந்த பணம் செலுத்தியவர்கள், ஸ்ரீதர் மீது காஞ்சீபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
போலீஸ் விசாரணையில், 500-க்கும் மேற்பட்டோரை ரியல் எஸ்டேட் அதிபர் ஸ்ரீதர் ஏமாற்றியுள்ளது தெரியவந்தது.
இந்தநிலையில் காஞ்சீபுரம் புத்தேரி தெருவில் பதுங்கியிருந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஸ்ரீதரை குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் பாபு தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், ஸ்ரீதரிடம் தாங்கள் பறிகொடுத்த பணத்தை மீட்டு தரக்கோரியும், இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியான ராஜா என்பவரை கைது செய்யக்கோரியும் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் மனு அளித்தனர்.