பூண்டி ஒன்றிய குழு கூட்டத்தில் தி.மு.க-பா.ஜ.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம்
பூண்டி ஒன்றிய குழு கூட்டத்தில் தி.மு.க-பா.ஜ.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதமும், கூச்சல் குழப்பமும் ஏற்பட்டது.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமண் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மகாலட்சுமி மோதிலால் முன்னிலை வகித்தார்.
இதில், பா.ஜ.க. கவுன்சிலர் சண்முகம் பேசும்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஊழல் புரிந்து வருவதாக குற்றம்சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. கவுன்சிலர் ஞானமுத்து தி.மு.க. ஆட்சியில் அனைத்து கொள்முதல் நிலையங்களில் தானியங்கள் முறையாக கொள்முதல் செய்யப்படுகிறது. பா.ஜ.க. கவுன்சிலரின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று தெரிவித்தார்.
மேலும், மத்தியிலுள்ள பா.ஜ.க. அரசு காரணமாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாகவும், இதனால் ஏழை, நடுத்தர வர்க்க மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதன் காரணமாக தி.மு.க, பா.ஜ.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதமும், கூச்சல் குழப்பமும் ஏற்பட்டது. இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் அனைவரையும் சமாதானப்படுத்தினார்.