வியாபாரி கொலையில் சகோதரர் மகன் கைது; தாய் சாவுக்கு காரணம் என தீர்த்து கட்டினார்
யாதகிரி அருகே வியாபாரி கொலை வழக்கில் சகோதரர் மகன் கைது செய்யப்பட்டார். தாய் சாவுக்கு காரணம் என நினைத்து தீர்த்து கட்டியது தெரியவந்துள்ளது.
யாதகிரி: யாதகிரி அருகே வியாபாரி கொலை வழக்கில் சகோதரர் மகன் கைது செய்யப்பட்டார். தாய் சாவுக்கு காரணம் என நினைத்து தீர்த்து கட்டியது தெரியவந்துள்ளது.
வியாபாரி கொலை
யாதகிரி மாவட்டம் சகாபுரா தாலுகா கோகி கிராமத்தைச் சேர்ந்தவர் கசீம்ஷாப் சவுத்ரி(வயது 50), வியாபாரி. இவர், கடந்த 21-ந் தேதி பக்ரீத்தையொட்டி மசூதிக்கு தொழுகைக்காக புறப்பட்டு சென்றார். அப்போது அவரை மர்மநபா்கள் வெட்டிக் கொலை செய்திருந்தனர். இதுகுறித்து சகாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர்.
இந்த நிலையில், சகாபுரா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கசீம்ஷாப்பை கொலை செய்ததாக, அவரது சகோதரர் மகன் ஹனீப்(30) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கசீம்ஷாப் வியாபாரத்துடன், மாந்தீரிகம் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. ஹனீப்பின் தாய் சமீபத்தில் உடல் நலக்குறைவால் உயிர் இழந்திருந்தார்.
தாய் சாவுக்கு காரணம்...
தன்னுடைய தாயை, தனது சித்தப்பா கசீம்ஷாப் தான் மாந்தீரிகம் செய்து, உயிர் இழக்க செய்து விட்டதாக ஹனீப் சந்தேகித்துள்ளார். இதன் காரணமாக கசீம்ஷாப்பை கொலை செய்ய ஹனீப் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து, கடந்த 21-ந் தேதி அதிகாலையில் கசீம்ஷாப் தனியாக தொழுகைக்கு செல்வது பற்றி அறிந்த ஹனீப், அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி இருந்தார்.
பின்னர் வீட்டுக்கு சென்று வேறு உடை மாற்றிக் கொண்டு வந்து யாருக்கும் சந்தேகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கஷீம்ஷாப் உடலை ஆம்புலன்சில் கொண்டு சென்ற போது ஹனீப்பும் உடன் சென்றதுடன், இறுதி சடங்குக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அவரே செய்திருந்ததும் தெரியவந்தது. கைதான ஹனீப் மீது சகாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.