கணவருடன் சேர்த்து வைக்க கோரி பெண் வக்கீல் போராட்டம்
கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி பெண் வக்கீல் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் சாலையில் உருண்டு கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
பத்மநாபபுரம்:
கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி பெண் வக்கீல் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் சாலையில் உருண்டு கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் வக்கீல்
குமரி மாவட்டம் தக்கலை அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ராஜஷெரின். இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் குழித்துறை திருத்துவபுரம் பகுதியை சேர்ந்த ஷீலாபிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ஷீலா பிரியதர்ஷினி குழித்துறை கோர்ட்டில் வக்கீலாக உள்ளார்.
போராட்டம்
இந்தநிலையில், ஷீலா பிரியதர்ஷினி நேற்று காலை 7.30 மணியளவில் முளகுமூடு பகுதியில் உள்ள கணவர் வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து திடீரென போராட்டம் நடத்தினார். கணவருடன் தன்னை சேர்த்து வைக்கக்கோரி அவர் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை சமாதானப்படுத்தி அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அவர் கதறி அழுதபடி சாலையில் உருண்டு புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போலீசார் விசாரணை நடத்திய போது ஷீலா பிரியதர்ஷினி கூறியதாவது:-
எனக்கும் ராஜஷெரினுக்கும் திருமணம் நடந்த போது 65 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கப்பணம், 25 சென்ட் நிலம் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
போலீசில் புகார்
திருமணத்திற்கு பின்பு கணவரின் உறவினர்கள் மீண்டும் அதிக அளவில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர். இதுதொடர்பாக போலீசில் வழக்கும் உள்ளது. இந்தநிலையில், எனது கணவரை என்னிடம் இருந்து பிரிக்க அவருடைய குடும்பத்தினர் முயற்சிக்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.
இதையடுத்து போலீசார், ராஜஷெரின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ராஜஷெரின் மதுரை சென்றிருப்பதாக அவரது தாயார் பதிலளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து ஷீலா பிரியதர்ஷினி, கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.