நெல்லையில் ரிங் ரோடு அமைக்கப்படும்- அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

நெல்லையில் ரிங் ரோடு அமைக்கப்படும் என என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Update: 2021-07-23 18:53 GMT
நெல்லை:
நெல்லை மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க ‘ரிங் ரோடு’ அமைக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

ஆய்வு கூட்டம்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார், கலெக்டர்கள் கோபாலசுந்தரராஜ் (தென்காசி), செந்தில்ராஜ் (தூத்துக்குடி), அரவிந்த் (கன்னியாகுமரி), மேகநாத ரெட்டி (விருதுநகர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வரவேற்றார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி, ஆய்வு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

2 ஆயிரம் கி.மீ. கிராம சாலைகள்

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு 2 ஆயிரம் கிலோ மீட்டர் கிராம சாலைகள், மாநில நெடுஞ்சாலைத்தரத்துக்கு மேம்படுத்தப்பட உள்ளது. மேலும் சாத்தியமுள்ள இடங்களில் 2 வழிச்சாலைகள் 4 வழிச்சாலைகளாகவும், 4 வழிச்சாலைகள் 6 வழிச்சாலைகளாகவும் மாற்றப்படும்.
தென்காசி நகர் பகுதியில் 6 கிலோ மீட்டர், அம்பை பகுதியில் 6 கிலோ மீட்டர், சங்கரன்கோவில் பகுதியில் 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நகர்ப்பகுதிகளில் புறவழிச்சாலைகளை அமைக்க அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
கன்னியாகுமரியில் தொங்கு பாலம்
சர்வதேச மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் தொங்கு பாலம் அமைக்க முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. 
பொருளாதார முன்னேற்றத்துக்கு சாலை வசதி மிகவும் முக்கியமானது. எனவே, நெடுஞ்சாலைத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நில எடுப்பு பிரச்சினை

நெடுஞ்சாலை துறை பணிகளை விரைவாக மேற்கொள்ள தமிழகத்தை 5 மண்டல பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான அரசாணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார்.
தமிழகம் முழுவதும் ரெயில்வே துறையின் பணிகளில் தொய்வு காரணமாக 58 ரெயில்வே பாலங்கள் முடிவு பெறாமல் இருக்கிறது.

நெல்லையில் ‘ரிங் ரோடு’

நெல்லை மாநகரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க மேற்கு பகுதியில் ‘ரிங் ரோடு’ அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தாழையூத்தில் தொடங்கி சங்கரன்கோவில் ரோடு, தென்காசி ரோடு, முக்கூடல் ரோடு, பாபநாசம் ரோடு ஆகியவற்றை இணைத்து நாகர்கோவில் 4 வழிச்சாலையில் இணைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த பணி விரைவில் தொடங்கப்படும். பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தில் மேம்பாலம் கட்டும் திட்டமும் செயல்படுத்தப்படும்.
திருச்செந்தூர் பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையான தனி நடைபாதை அமைப்பது குறித்தும் அரசு சிறப்பு கவனம் செலுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.

எம்.எல்.ஏ.க்கள்

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், ரூபி மனோகரன், ராஜா, சதன் திருமலைக்குமார், பழனிநாடார், சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ், மார்க்கண்டேயன், ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, நெல்ைல கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் மற்றும் 5 மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்