ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நாமக்கல் மாவட்டத்தில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்:
ஆடி மாத வெள்ளிக்கிழமை
ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் தட்டாரத்தெருவில் உள்ள பலபட்டரை மாரியம்மன் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து சாமி மஞ்சள்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர் மகா தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோவில்களில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் மகாமாரியம்மன் கோவிலில் பால்குட அபிஷேக குழு சார்பில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி, பால்குடம், தீர்த்த குடத்துடன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
இதையடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தன.
மோகனூர், ராசிபுரம்
மோகனூர் சுப்பிரமணியபுரம் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. இதையடுத்து அம்மன் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோல் மோகனூர் மாரியம்மன், காளியம்மன், எஸ்.வாழவந்தி மாரியம்மன், செல்லாண்டியம்மன், அங்காளம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து அம்மன் வேப்பிலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராசிபுரம் எல்லை மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.