பட்டுக்கோட்டையில் தனியார் விடுதி மாடியில் இருந்து விழுந்த வியாபாரி சாவு
பட்டுக்கோட்டையில் தனியார் விடுதி மாடியில் இருந்து விழுந்த வியாபாரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது 62). வியாபாரி. இவர், அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான லியாகத் அலி என்பவருடன் பட்டுக்கோட்டை சின்னையா தெருவில் ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு 7 மணிக்கு சாகுல் ஹமீது, விடுதியின் 2-வது மாடியில் கைப்பிடி சுவரில் அமர்ந்து காற்று வாங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் விடுதி மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த சாகுல் ஹமீது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து லியாகத் அலி கொடுத்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாகுல் ஹமீது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.