குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானை

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குட்டிகளுடன் காட்டு யானை உலா வந்தது. இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-07-23 16:48 GMT
ஊட்டி

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குட்டிகளுடன் காட்டு யானை உலா வந்தது. இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

காட்டு யானைகள் 

குன்னூர் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகள், மலைபாதைகள் முழுவதும் பசுமையாக காணப்படுகிறது. யானைகளுக்கு பிடித்த உணவான மூங்கில், வாழை, கோரை புற்கள் அதிகமாக உள்ளன. 

இதனை உண்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் குன்னூரை சுற்றி உள்ள பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து உள்ளது. 

இந்த நிலையில் நேற்று குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை காட்டேரி பூங்கா பகுதியில் 2 குட்டிகளுடன் காட்டு யானை முகாமிட்டு உணவுகளை உட்கொண்டது. 

சாலையில் உலா வந்தது 

பின்னர் அந்த யானை குட்டிகளுடன் நீண்ட நேரமாக சாலையில் உலா வந்தது. இதனால் அந்த வழியாக வந்த அரசு பஸ்கள் சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் செல்ல முடியாமல் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. 

சாலையின் இருபுறத்திலும் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்தபடி காத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

வனத்துறையினர் விரட்டினர் 

பின்னர் அவர்கள் சாலையில் உலா வந்த காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினார்கள். பின்னர் அங்கு போக்குவரத்து சரியானது.

 காட்டு யானைகள் சாலையில் உலா வந்ததால் அந்தப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்