போடி பகுதியில் தொடர் சாரல் மழை கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
போடி பகுதியில் பெய்த தொடர் சாரல் மழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
போடி :
போடி நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள மலைப்பகுதிகளான முந்தல், குரங்கணி, போடிமெட்டு, வடக்கு மலை, கொட்டக்குடி, டாப் ஸ்டேஷன், கொழுக்கு மலை, ஊத்தாம்பாறை, சேரடிப்பாறை ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக இரவு மற்றும் பகல் நேரங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிள்ளையார் தடுப்பணையில் அதிக அளவில் தண்ணீர் அருவி போல் கொட்டுகிறது. இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். சிலர் குடும்பமாக சுற்றுலா வந்து குளித்து மகிழ்ச்சி அடைகின்றனர்.