வேதாரண்யம் தியேட்டரில் ரூ.70 ஆயிரம் வயர் திருட்டு; 2 பேர் கைது
வேதாரண்யம் தியேட்டரில் ரூ.70 ஆயிரம் வயர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்,
வேதாரண்யம்-திருததுறைப்பூண்டி சாலையில் தியேட்டர் அமைந்துள்ளது. இந்த தியேட்டரை நாகை வெளிபாளையத்தை சேர்ந்த பாலாஜி (வயது24) என்பவர் குத்தகைக்கு ஒப்புக் கொண்டுள்ளார். இதையொட்டி தற்சமயம் அந்த தியேட்டரில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
இந்த சமயத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் தியேட்டரில் புகுந்து ஸ்பீக்கருக்கு செல்லும் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள வயர்களை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து பாலாஜி வேதாரண்யம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா சப்-இன்ஸ்பெக்டர் பத்மசேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வேதாரண்யம் நாக தோப்பு பகுதியை சேர்ந்த அருண்பாண்டியன் (வயது30), வேதாரண்யம் நாகை சாலையை சேர்ந்த கணேசன் (26) ஆகிய 2 பேர் தியேட்டரில் வயர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள வயர்களை பறிமுதல் செய்தனர்.