ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு
வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
தேனி:
ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் விளக்கேற்றியும், கூழ் காய்ச்சியும் வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று தேனி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில்
தேனி அருகே வீரபாண்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவிலில் நேற்று அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர். கோவில் அருகில் ஓடும் முல்லைப்பெரியாற்றில் புனித நீராடிய பக்தர்கள், கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பலர் தங்கள் வீடுகளில் இருந்து கூழ் காய்ச்சி எடுத்து வந்து சாமிக்கு படைத்தனர். பின்னர் அவர்கள் அதை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
கோவிலில் பக்தர்கள் அலைமோதியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை. பக்தர்கள் பலர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கோவிலில் குவிந்தனர்.
இதுபோல் தேனி காட்டு பத்ரகாளியம்மன் கோவில், மேலப்பேட்டை பத்ரகாளியம்மன், சந்தை மாரியம்மன் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
போடி-கம்பம்
போடி சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று பத்மாவதி தாயாருக்கு அபிஷேகம் செய்து திருச்சானூர் பத்மாவதி தாயார் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் 1,008 சகஸ்ரநாம அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் போடி சாலை காளியம்மன் கோவில், சுப்புராஜ் நகர் புதுக்காலனி ஆதிபராசக்தி அம்மன் கோவில், திருமலாபுரம் பத்ரகாளியம்மன் கோவில் ஆகிய அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கம்பத்தில் உள்ள கவுமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு மஞ்சள், இளநீர், தயிர், பச்சரிசிமாவு உள்ளிட்டவற்றால் 11 வகை அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதேபோல் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன், நாகம்மாள் கோவில், சாமாண்டிபுரத்தில் உள்ள சாமாண்டியம்மன் கோவில், பூதிமேடு களத்தில் உள்ள மாசாணியம்மன் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதுபோல மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் நேற்று குவிந்தனர். அவர்கள் கோவில் வளாகத்தில் விளக்கேற்றியும், கூழ் காய்ச்சியும் வழிபாடு நடத்தினர்.