உண்டியல் மூலம் ரூ.42¼ லட்சம் வருமானம்
உண்டியல் மூலம் ரூ.42¼ லட்சம் வருமானம்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். அமாவாசை தினங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசிக்க வருகின்றனர்.
இந்த நிலையில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற கோரி காணிக்கை செலுத்துகின்றனர். இதற்காக கோவில் வளாகத்தில் தட்டு காணிக்கை மற்றும் நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளது. உண்டியல்களை மாதந்தோறும் திறந்து எண்ணுவது வழக்கம்.
இந்த நிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கடந்த 4-ந்தேதி கோவில் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் கோவை பேரூர் கோவில் உதவி ஆணையர் விமலா, கோவில் உதவி ஆணையர் கருணாநிதி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இந்த பணியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
கோவில் வளாகத்தில் இருந்த 9 தட்டு காணிக்கை உண்டியல்கள் மற்றும் 22 நிரந்தர உண்டியல்கள் எண்ணப்பட்டன. தட்டு காணிக்கை மூலம் ரூ.7 லட்சத்து 19 ஆயிரத்து 238, நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.35 லட்சத்து 20 ஆயிரத்து 361 சேர்த்து மொத்தம் ரூ.42 லட்சத்து 39 ஆயிரத்து 599 வருமானமாக கிடைத்தது. இதை தவிர 301 கிராம் தங்கம், 343 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்தன.