மேட்டுப்பாளையம்
மழை காரணமாக நீர்மட்டம் 97 அடியை எட்டியதால் பில்லூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பில்லூர் அணை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பில்லூர் அணை உள்ளது. நீலகிரி மாவட்டம், அணையின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளா வில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு பில்லூர் அணை கட்டப்பட்டு உள்ளது.
இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடி ஆகும். தென் மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
தண்ணீர் திறப்பு
நேற்று முன்தினம் இரவு அணைக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயரம் 94 அடியை எட்டியது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
நேற்று அதிகாலை 3 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிக ரித்ததால் அணையின் நீர்மட்ட உயரம் 97 அடியாக உயர்ந்தது.
இதனால் அணையின் நீர்மட்டஉயரத்தை ஒரே சீராக வைத்திருக்கும் வகையிலும், பாதுகாப்பு கருதியும் அணையின் 4 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
வெள்ளப்பெருக்கு
அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
மின் உற்பத்திக்காக 2 எந்திரங்களை இயக்கியதில் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி மற்றும் மதகுகள் வழியாக வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி என மொத்தம் வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறியது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதையடுத்து பில்லூர் அணைக்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியும், காலை 8 மணிக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியும், பகல் 12 மணி மற்றும் மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியும், இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
பில்லூர் அணைக்கு எவ்வளவு தண்ணீர் வந்ததோ, அதே அளவு தண்ணீர் தண்ணீர் வெளியேறப்பட்டது. இதன் மூலம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 97 அடியாக இருக்கும் வகையில் அதிகாரிகள் கண்காணித்தனர்.
கலெக்டர் ஆய்வு
பில்லூர் அணை திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரை யோர பகுதி மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதனால் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் மற்றும் அதிகாரிகள் நேற்று இரவோடு இரவாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோர பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் ஆற்றின் கரையோர பகுதியில் வசிப்பவர்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருமண மண்டபங்களை கலெக்டர் சமீரன் பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேட்டறிந் தார்.
தேக்கம்பட்டி நெல்லித்துறை, மேட்டுப்பாளையம் ஆலாங்கொம்பு, சிறுமுகை மற்றும் ஆற்றின் கரையோர பகுதிகளை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் நேற்று காலை பார்வையிட்டார்.
அப்போது, தாசில்தார் ஷர்மிளா, மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் சசிகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார், கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஒத்துழைக்க வேண்டும்
இது குறித்து கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் கூறியதாவது
மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவின்பேரில் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேக்கம்பட்டி, நெல்லித் துறை, மேட்டுப்பாளையம், ஆலாங்கொம்பு, சிறுமுகை ஆகிய ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு கருதி மேடான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் அங்கு ஒலிபெருக்கி மற்றும் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து விடப்பட்டு வருகிறது.
ஆற்றின் கரையோரப் பகுதி மக்கள் தங்குவதற்கு மேட்டுப்பாளையத் தில் 7 திருமண மண்டபங்களும், 2 பள்ளிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. வெள்ளப்பெருக்கு உள்ளதால் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம்.
வருவாய் துறை, போலீசார், தீயணைப்பு துறை, நகராட்சி துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட தயார் நிலையில் உள்ளனர். அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.