கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருப்பூர் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

Update: 2021-07-23 12:47 GMT
திருப்பூர்
ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருப்பூர் பகுதியில்  உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
ஆடி மாத சிறப்பு 
ஆடி என்பது சிறப்பு மிக்க ஆன்மிக மாதம். இது தமிழ் மாதத்தின் நான்காவது மாதமாகும். வேத பாராயணங்கள், ஆலய சிறப்பு வழிபாடுகள், மந்திரங்கள், பூஜைகள் ஆகியவற்றிக்கு கூடுதல் சக்தி அளிக்கும் மாதமாக கருதப்படுகிறது. தமிழ் மாதத்தை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். ஆடி முதல் மார்கழி வரை புண்ணிய காலமான தஷ்ணாயண காலமாகும். இது ஆன்மிக மனம் கமழும் ஆடி மாதமாகவே திகழ்கிறது. ஆடிமாதத்தில் ஆடிவெள்ளி, வரலட்சுமி விரதம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடித்தபசு, நாகசதுர்த்தி, கருடபஞ்சமி என தொடர்ச்சியாக சுப தினங்கள் வந்து கொண்டே இருக்கும்.
ஆடி மாதத்தை சக்தி மாதம் மற்றும் அம்மன் மாதம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஆடி மாதமானது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. எனவே இம்மாதத்தின் அனைத்து வெள்ளிகிழமைகளிலும், அம்மன் ஆலயங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்துவர். பொதுவாக வெள்ளிக்கிழமை என்பதே சிறப்பான நாளாகத்தான் கருதப்படுகிறது. அதிலும் அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாத வெள்ளி என்பது கூடுதல் சிறப்பு. இம்மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் பெண்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்வார்கள்.
 சேவூர் அம்மன் கோவில்
தற்போது கொரோனா தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கோவில்கள் திறக்கப்பட்டு பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியளித்ததையடுத்து ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று சேவூர் அழகு நாச்சியம்மன் என்ற பத்ரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதில் பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பன்னீர் உள்பட 32 வகையான திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகபூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனைகள் நடைபெற்றது. ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை என்பதால் காலை முதலே சேவூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிமானோர் கலந்து கொண்டு முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். 
இதேபோல் சேவூர் அங்காளம்மன் கோவில், சக்தி மாரியம்மன் கோவில், காமராஜ்நகர் புற்றுக்கண் மாரியம்மன் கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதேபோல் சேவூர் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பெருமாநல்லூர்
 பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், அம்மனுக்கு புஷ்பலங்காரத்தில் குதிரை பவனி வருவது போல சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு அலங்காரத்தில் இருந்த அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பல்லடம்
 பல்லடம் பகுதியில் உள்ள கடைவீதி மாகாளியம்மன், பொன்காளியம்மன், அங்காளம்மன், பச்சாபாளையம் மாகாளியம்மன், பனப்பாளையம் மாரியம்மன், உள்ளிட்ட அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.


மேலும் செய்திகள்