பணி பொறுப்பாளர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் மறியல்

மாமல்லபுரம் அருகே பணி பொறுப்பாளர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பணியில் ஈடுபடும் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-07-23 04:40 GMT
மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த காரணை ஊராட்சியில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் அந்த கிராம பெண்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் வேலை செய்யும் பெண்களின் வருகை குறித்த பதிவேடு பராமரித்தல், சம்பளம் வழங்க அவர்களின் வங்கி கணக்குகளை சரிபார்த்தல் பணிக்காக பணி பொறுப்பாளராக வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் இந்த பணியில் வேலை செய்யும் ஒரு பெண் நியமிக்கப்படுவது வழக்கம்.

அனைத்து ஊராட்சிகளிலும் சுழற்சி முறையில் 100 நாட்களுக்கு ஒரு பெண் என்ற அடிப்படையில் பணி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் பணியாளர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் காரணை ஊராட்சியில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் 100 நாட்களை நிறைவு செய்யாத பணி பொறுப்பாளரை திடீரென நீக்கிவிட்டு ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறி காரணை ஊராட்சியை சேர்ந்த தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்கள் பலர் நேற்று மாமல்லபுரம்-திருக்கழுக்குன்றம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

கட்சி பார்த்து பணி்பொறுப்பாளர் வேலை வழங்காதே. நடைமுறையில் உள்ளது போல் அனைவருக்கும் சுழற்சி முறையில் பணிபொறுப்பாளர் வேலை வழங்கு என்று கோஷம் எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர்

தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், பா.ம.க. மாவட்ட செயலாளர் காரணை ராதா ஆகியோர் 100 நாள் வேலை திட்ட பெண்களின் கோரிக்கை குறித்து திருப்போரூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது உள்ள பணிப்பொறுப்பாளரே தேசிய ஊரக வேலை திட்ட பணியில் தொடருவார் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்