பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.48 லட்சம் குட்கா பறிமுதல் 2 பேர் கைது

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.48 லட்சம் குட்கா பறிமுதல் 2 பேர் கைது.

Update: 2021-07-21 00:15 GMT
ஸ்ரீபெரும்புதூர்,

பெங்களூருவில் இருந்து சென்னை பூந்தமல்லிக்கு தடைசெய்யப்பட்ட குட்கா வாகனத்தில் கடத்தி செல்வதாக குற்ற புலனாய்வு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார் சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டதும் மினி வேன் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. போலீசார் அந்த வாகனத்தை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அந்த வேனுக்குள் போலீசார் சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தில் வந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த சிந்தாமணி நகரை சேர்ந்த பிரபாகரன் (வயது 28), அதே பகுதியை சேர்ந்த அருண் கிருஷ்ணகுமார் (23) இருவரையும் பிடித்து சுங்குவார்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 675 கிலோ எடை கொண்ட ரூ.48 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் மினி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்