20 ஆண்டுகளாக சிறையில் உள்ள கைதியை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி வழக்கு

20 ஆண்டுகளாக சிறையில் உள்ள கைதியை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-07-20 19:29 GMT
மதுரை, ஜூலை.
20 ஆண்டுகளாக சிறையில் உள்ள கைதியை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கொலை வழக்கில் ஆயுள்
மதுரை சோலைஅழகுபுரத்தை சேர்ந்த புஷ்பா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனது சகோதரர் சுந்தர் என்ற பல்லு சுந்தருக்கு (வயது 50) கடந்த 2000-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது இருந்து அவர் மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்த தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த அப்பீல் மனு தள்ளுபடி ஆனது. எனவே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் சிறையிலேயே இருந்து வருகிறார். திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் அவரது இருதய பாதிப்பு காரணமாக, ஆபரேசன் செய்யப்பட்டது.
விடுவிக்க வேண்டும்
நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களாலும் அவதிப்படுகிறார். எனவே அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலன் இல்லை. எங்கள் மனுவின் அடிப்படையில் அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் ஆர்.வெங்கடேசன் ஆஜராகி, சிறையில் நோய் வாய்ப்பட்டு அவதிப்படும் மனுதாரரின் சகோதரரை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் சிறையில் ஆய்வு நடத்தி உள்ளார். அதன் அடிப்படையில் அவரை விடுதலை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.
உத்தரவு
விசாரணை முடிவில், மனுதாரரின் சகோதரரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து 2 வாரத்தில் தமிழக அரசுக்கு மதுரை மாவட்ட கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதை தமிழக அரசு 4 வாரத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்