திருச்சியில் போலீஸ் நிலையம் முன் நிறுத்தப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை திருடிய பலே ஆசாமி

போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை பலே ஆசாமி திருடிச்சென்று விட்டார்.

Update: 2021-07-20 19:16 GMT
திருச்சி, 
போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை பலே ஆசாமி திருடிச்சென்று விட்டார்.

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

திருச்சி மாநகரில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு அதிகரித்து வருகிறது. கைவரிசை காட்டும் திருட்டு ஆசாமிகளை பிடிக்க, மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது. 

சமீபத்தில் 39 மோட்டார் சைக்கிள்களை தனி ஆளாக திருடிய ஒருவரை தனிப்படை போலீசார் வாகன தணிக்கையில் கண்டுபிடித்து கைது செய்தனர். 39 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் மீட்டு உயர் அதிகாரியின் பாராட்டையும் பெற்றனர். 

இந்த நிலையில் திருச்சியில் போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் புதிய மோட்டார் சைக்கிள் ஒன்றை பலே ஆசாமி ஒருவன் திருடிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் செல்வகுமார் (வயது 52). நேற்று முன்தினம் இரவுப்பணிக்கு வந்த அவர், மோட்டார் சைக்கிளை, போலீஸ் நிலையம் முன் உள்ள பாலத்தின்கீழ் நிறுத்தி விட்டு பணிக்கு சென்று உள்ளார்.

பணி முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது, போலீஸ் நிலையம் முன் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இரவு வேளையில் ஒரு ஆசாமி அதை திருடிச்சென்றது தெரியவந்தது. 

இதுகுறித்து தான் வேலை பார்க்கும் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் நிலையம் முன் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில், மோட்டார் சைக்கிள் திருடிச்சென்ற பலே ஆசாமியின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்