கரூர் மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த சாயப்பூங்கா அமைக்க நடவடிக்கை

கரூர் மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த சாயப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, ஆர்.காந்தி ஆகியோர் உறுதி அளித்தனர்.

Update: 2021-07-20 19:11 GMT
கரூர்
கரூர்
ஆலோசனை கூட்டம்
கரூர் மணல்மேடு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா வளாக கூட்ட அரங்கில் நேற்று தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மற்றும் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். 
கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் ஆணையர் பீலா ராஜேஷ், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், எம்.எல்.ஏ.க்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள ஆயத்த ஆடை உற்பத்தியாளர் சங்க கூட்டமைப்பினர், கைத்தறி நெசவாளர் சங்க கூட்டமைப்புகளின் தலைவர் மற்றும் பிரதிநிதிகள், கரூர் மாவட்டத்தின் ஜவுளி உற்பத்தியினை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த சாயப்பூங்கா வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். 
விமான நிலையம் அமைக்கப்படும்
கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்ததாவது:- 
 கரூர் மாவட்டத்தில், மேலும் தொழில் வளம் பெருகும் வகையிலும், அதிக அளவிலான நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும், தொழில்துறையில் ஒரு புரட்சி ஏற்படுத்தும் வகையிலான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். ஆயத்த ஆடை உற்பத்திக்கு சாயப்பூங்கா என்பது இன்றியமையாததாகும். தண்ணீரை முறையாக சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். அதே நேரத்தில் விவசாய நிலங்களுக்கும் பாதிப்பும் ஏற்படாமல் விவசாயத்தையும் பாதுகாக்கும் வகையில், இரண்டையும் இரண்டு கண்கள் போல பாதுகாக்க வேண்டும். ஒருங்கிணைந்த சாயப்பூங்கா அமைக்க முதல்-அமைச்சரிடம் அனுமதியும், அதற்கான நிதியும் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் வாக்குறுதிப்படி கரூர் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.450 கோடிக்கு ஜவுளி ஏற்றுமதி
 அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்ததாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நெசவாளர்களின் நலனையும், தொழில் முனைவோர்களின் நலனையும் கருத்தில் கொண்டு கரூர் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது இந்த ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா. கரூர் மாவட்டத்தில் ஜவுளிப்பூங்காவில் ஆயத்த ஆடை உற்பத்தியில் சுமார் ரூ.450 கோடி மதிப்பிலான ஜவுளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கைத்தறி மற்றும் ஜவுளி உற்பத்தியினை மேம்படுத்தும் வகையிலான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆயத்த ஆடை உற்பத்தி
பின்னர், ஜவுளிப்பூங்காவில் ஆயத்த ஆடை உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலைகளை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து, மலைக்கோவிலூர் பகுதியில் மாவட்ட கைத்தறி நூற்பாலை செயல்பட்டு வந்த சுமார் 51.33 ஏக்கர் பரப்பிலான இடத்தினை பார்வையிட்ட அவர்கள் அரசின் பிற திட்டங்களுக்கு இந்த இடத்தைப் பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். 
 நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட ஜவுளிப்பூங்கா நிறுவனத்தின் தலைவர் நாச்சிமுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கைத்தறி மற்றும் துணி நூல் துறை இணை இயக்குனர்கள் சாரதி சுப்புராஜ், கிரிதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோரிக்கை மனு
ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர் ஆர்.காந்தியிடம் கரூர் நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்க தலைவர் தனபதி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- 
ஜவுளி தொழிலுக்கு முக்கிய தேவை சாயத்தொழில். ஆகையால் கரூர் நகருக்கு ஒரு ஜவுளி சாயபூங்கா அமைத்து கொடுக்க வேண்டும். சிறு விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் 750 யூனிட்டில் இருந்து 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்க வேண்டும். கைத்தறியில் மட்டுமே உற்பத்தி செய்ய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 11 ரகங்களை சாதாரண விசைத்தறியிலும் உற்பத்தி செய்து கொள்ளலாம் என்று சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்