பரமத்திவேலூர்-கபிலர்மலை சாலையில் ஓய்வுபெற்ற அரசு பஸ் டிரைவர் தீக்குளிப்பு-ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
பரமத்திவேலூர்-கபிலர்மலை சாலையில் ஓய்வுபெற்ற அரசு பஸ் டிரைவர் தீக்குளித்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பரமத்திவேலூர்:
தீக்குளிப்பு
பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 61). ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர். இவருடைய மனைவி சசிகலா. இவர் கூட்டுறவு வங்கி ஒன்றில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் சேகர் தனது மொபட்டில் பரமத்திவேலூரில் இருந்து கபிலர்மலை செல்லும் சாலையில் உள்ள பிருந்தாவன் நகர் பகுதிக்கு வந்தார். அங்கு சாலையோரம் தனது மொபட்டை நிறுத்தினார். பின்னர் பையில் இருந்த பாட்டிலை எடுத்து அதிலிருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி, தீ வைத்து கொண்டார்.
தீவிர சிகிச்சை
தீ அவரது உடல் முழுவதும் மளமளவென பரவியது. இதனால் வலியால் அலறிய அவர் மீது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சேகர் குடும்ப தகராறு காரணமாக தீக்குளித்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் சாலையில் தீக்குளித்த சம்பவம் பொத்தனூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.