தொழிலாளி கொலை வழக்கில் கள்ளக்காதலி உள்பட 2 பேர் கைது
புதுக்கோட்டையை சேர்ந்த தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
கூலித்தொழிலாளி கொலை
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா சீமானூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சங்கிலி முருகன் (வயது 30). இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜா, பாலகிருஷ்ணன் மற்றும் சரவணன் ஆகியோருடன் நாமக்கல் போதுப்பட்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அங்குள்ள பேப்பர் ஸ்டோரில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17-ந் தேதி இரவு குடிபோதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்து தலையில் அடிப்பட்டு இறந்து விட்டதாக, சங்கிலி முருகனின் குடும்பத்தினருக்கு அவருடன் தங்கி இருந்தவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து சங்கிலி முருகனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து சென்று அவருடைய உறவினர்கள் புதைத்து விட்டனர்.
கள்ளக்காதல்
இதற்கிடையே சங்கிலி முருகனின் சகோதரர் பாண்டித்துரையிடம், அவருடன் வேலை பார்த்து வந்த பாலகிருஷ்ணன் சங்கிலி முருகன் கொலை செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பாண்டித்துரை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையிலான தனிப்படையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணநடத்தினர்.
விசாரணையில் சங்கிலி முருகனுக்கும், பாத்திமா (33) என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், கொலை நடந்த அன்று இரவு நாமக்கல் போதுப்பட்டி காலனியில் உள்ள முனியப்பன் கோவில் அருகில் சங்கிலி முருகன் குடித்து விட்டு வந்து பாத்திமாவிடம் தகராறு செய்ததும் தெரிந்தது. அப்போது ராஜா (29), சங்கிலி முருகனுடன் கைகலப்பில் ஈடுபட்டு காலால் எட்டி உதைத்து சாக்கடையில் தள்ளி விட்டதில், தலையில் பலத்த அடிபட்டு சங்கிலி முருகன் இறந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
2 பேர் கைது
இதைத்தொடர்ந்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பாத்திமா மற்றும் ராஜா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கடந்த 19-ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் சீமானூர் சுடுகாட்டில் சங்கிலி முருகனின் பிரேதத்தை வருவாய்த்துறையினர் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் பாராட்டினார்.