பருப்பு வகைகளை இருப்பு வைக்க புதிய உச்சவரம்பு நிர்ணயம்
பருப்பு வகைகளை இருப்பு வைப்பதற்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ள நிலையில் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர்,
பருப்பு வகைகளை இருப்பு வைப்பதற்கு உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ள நிலையில் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உச்ச வரம்பு
கடந்த ஜூன் 2-ந் தேதி பாசிப்பருப்பை தவிர இதர அனைத்து வகை பருப்பு வகைகளுக்கு இருப்பு வைப்பதில் இறக்குமதியாளர்கள், ஆலை உரிமையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்களுக்கு மத்திய அரசு உச்ச வரம்பு விதித்தது.
பருப்பு வகைகள் விலை ஏற்றம் மற்றும் பதுக்கலை தடுப்பதற்காக பருப்பு வகைகளை இருப்பு வைப்பதில் உச்சவரம்பை நிர்ணயித்தது. தற்போது மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை, மசூர் பருப்பு ஆகியவற்றை இருப்பு வைக்க அக்டோபர் 31-ந் தேதி வரை உச்சவரம்பு விதிக்கப்படுகிறது.
விற்பனையாளர்கள்
இதன்படி மொத்த விற்பனையாளர்கள் 500 டன் வரை பருப்பு வகையை இருப்பு வைத்துக் கொள்ளலாம். இதில் ஒரு வகையை சேர்ந்த பருப்பு 200 டன்னுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பருப்பு உற்பத்தி செய்யும் ஆலை உரிமையாளர்கள் 6 மாத காலத்தில் உற்பத்தி செய்யும் அளவு அல்லது ஆண்டு மொத்த உற்பத்தியில் 50சதவீதம் இதில் எது அதிகமோ அந்த அளவில் பருப்பு வகைகளை இருப்பு வைத்துக்கொள்ளலாம்.
சில்லறை விற்பனையாளர்கள் 5 டன் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பருப்பு வகைகளில் அறிவிக்கப்பட்டுள்ள அளவை விட அதிகமாக இருப்பு இருந்தால் இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு அளவிற்குள் இருப்பை கொண்டு வரவேண்டும்.
இருப்பு விவரம்
பருப்புவகைகளை இறக்குமதி செய்யும் இறக்குமதியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இறக்குமதியாளர்கள், ஆலை உரிமையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் அனைவரும் இணையதளத்தில் இருப்பு விவரத்தை தெரிவிப்பதை தொடர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களில் மசூர் பருப்பை தவிர பிற அனைத்து வகை பருப்புகளின் மொத்த விற்பனை விலை 3 முதல் 4 சதவீதமும், சில்லறை விற்பனையில் 2 முதல் 4 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைய வாய்ப்பு
இந்நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பால் பருப்பு வகைகள் விலை குறைய வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து பருப்பு விற்பனையாளர் ராஜசேகரன் கூறியதாவது:-
பொதுவில் ஒரு பொருள் இருப்பு வைப்பதற்கு உச்சவரம்பு கொண்டுவந்தால் அந்த பொருளின் விலை மார்க்கெட்டில் குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும். அந்த வகையில் பருப்பு விலை உயர்ந்ததால் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்தது. கடந்த ஜூன் மாதம் கொண்டுவந்த உச்சவரம்பு நடவடிக்கையால் பருப்பு விலை ஓரளவு குறைந்தது.
ஆனால் தற்போது மீண்டும் உயர தொடங்கி உள்ளது. எனவே மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் பருப்பு விலை குறைய வாய்ப்பு ஏற்படும். ஆனால் இறக்குமதியாளர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதியாளர்கள் அதிக அளவில் இருப்பு வைக்க வாய்ப்பு ஏற்படும். எனவே ஒட்டுமொத்தமாக அனைத்து தரப்பினருக்கும் பருப்பு இருப்பு வைக்க உச்ச வரம்பை நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான் மத்திய அரசு எதிர்பார்க்கும் அளவிற்கு பருப்பு விலை குறைய வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.