மன்னார்குடியில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருள் விற்ற கடைகளுக்கு அபராதம்

மன்னார்குடியில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருள் விற்ற கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் அபராதம் விதித்தார்.

Update: 2021-07-20 18:22 GMT
மன்னார்குடி,

மன்னார்குடி நகரப்பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்தும் மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறித்தும் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க திருவாரூர் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று திருவாரூர் உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் சவுமியாசுந்தரி மன்னார்குடி பஸ்நிலையம் மற்றும் கடைத்தெருவில் உள்ள கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த தடைசெய்யப்பட்ட நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்கள் 3 கிலோ அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டது. தடைசெய்யப்பட்ட பொருட்களை இருப்பு வைத்திருந்த கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சுகாதாரமற்ற முறையில் உணவு பொருள்

மேலும், உணவு பாதுகாப்பு துறையின் பதிவு மற்றும் உரிமம் இல்லாத கடைகளுக்கு உரிய சான்றிதழ்களை பெற 7 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அவ்வாறு பெறாத கடைகள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இதேபோல் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருள் விற்ற கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பொதுமக்கள் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம் என உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சவுமியாசுந்தரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்