3 விசைப்படகுகள், 15 மீனவர்கள் சிறைபிடிப்பு
ராமேசுவரத்தில் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் மீன்பிடித்த மண்டபத்தை சேர்ந்த 3 படகு மற்றும் 15 மீனவர்களை நாட்டுப்படகு மீனவர்கள் சிறைப்பிடித்தனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் மீன்பிடித்த மண்டபத்தை சேர்ந்த 3 படகு மற்றும் 15 மீனவர்களை நாட்டுப்படகு மீனவர்கள் சிறைப்பிடித்தனர்.
கூண்டுவலை
ராமேசுவரம் ஓலைக்குடா கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் நேற்று 15 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன் பிடித்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாட்டுப்படகு மீனவர்கள் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் மீன்களுக்காக விரிக்கப்பட்டிருந்த கூண்டு வலைகள் சேதமடைந்ததால் கரையோரத்தில் மீன் பிடித்த மண்டபத்தை சேர்ந்த 3 விசைப் படகுகளையும் மற்றும் அதில் இருந்த 15 மீனவர்களையும் ஓலைகுடா பகுதியைச் சேர்ந்த கிராம மக்களும், நாட்டுப்படகு மீனவர்களும் சேர்ந்து சிறைப்பிடித்தனர். தொடர்ந்து படகை அங்கேயே சிறை பிடித்து நிறுத்தியதுடன் 15 மீனவர்களையும் சிறைபிடித்து கிராமத்திற்குகொண்டு சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மண்டபம் மீன்துறை உதவி இயக்குனர் அப்துல் ஜெய்லானி தலைமையில் மீன்துறை அதிகாரிகளும் மற்றும் மண்டபத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர் சங்க நிர்வாகிகளும் ராமேசுவரம் ஓலைக்குடா கிராமத்திற்கு வருகை தந்தனர். ஓலைக்குடாகிராம தலைவர் ஜெபமாலை பாஸ்கர் நடந்த சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் சகாயராஜ் உள்ளிட்ட அந்த பகுதியை சேர்ந்த மீனவர்களும், மண்டபத்தை சேர்ந்த மீன் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் இனிவரும் நாட்களில் ராமேசுவரம் சங்குமால், ஓலைக்குடா உட்பட்ட கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் அரசு உத்தரவை மீறி தடையை மீறி விசைப்படகுகள் மீன் பிடிக்க வந்தால் அந்த படகை கண்டிப்பாக விடமாட்டோம் எனவும், இதனால் கடும் பிரச்சினை ஏற்படும் எனவும் அந்த பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் எச்சரிக்கை செய்தனர்.
அபராதம்
சேதமான கூண்டு வலைகளுக்கும் நிவாரணத்தை இந்த 3 படகின் உரிமையாளர்கள் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். அப்போது மீன்துறை அதிகாரிகள் கரையோரத்தில் மீன் பிடித்த மண்டபத்தைச் சேர்ந்த 3 படகுகளுக்கும் தலா ரூ.15ஆயிரம் அபராதம் விதிப்பதுடன் 3 மாதத்திற்கு மானிய டீசல் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அதனால் இந்த 3 படகுகளையும் 15 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட படகு மற்றும் மீனவர்களை ராமேசுவரம் ஓலைக்குடா கிராம மக்கள் விடுவித்தனர்.