பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சிறுமியை பெற்றோர் அழைத்து வந்தனர். அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதனை செய்ததில் 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்தசிறுமியை 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மணியும் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நேரடி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அந்த சிறுமி 17 வயது சிறுவனை காதலித்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அந்த சிறுவன் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த விஷயம் சிறுமியின் உறவினரான மகரஜோதி (31) என்பவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. மேலும் இந்த விஷயம் அந்த பகுதியை சேர்ந்த பிரவீன் (19), முத்துமுருகன் (19), நாகராஜ் (19) மற்றும் 16 வயது சிறுவனுக்கு தெரிந்தது. இதை தொடர்ந்து அவர்களும் அடுத்தடுத்து அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 6 பேரையும் பிடித்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் 6 பேரையும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.