அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்
அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்
அன்னூர்
கோவையை அடுத்த கோவில்பாளையம், கோட்டைபாளையம், குப்பைபாளையம் வழியாக செல்லும் புறவழிச்சாலை அமைக்க பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் கடும்எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் அச்சம்பாளையத்தில் கல் நடுவதற்காக சாலையை அளக்கும் பணி நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்த விவசாயிகள் அப்பகுதிக்கு விரைந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் புறவழி சாலை அமைப்பது குறித்து அதிகாரிகள் மற்றும் அன்னூர் வட்டார விவசாயிகள், பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் அன்னூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
இதற்கு வட்டாட்சியர் ரவிச்சந்திரன், அன்னூர் தாசில்தார் ரத்தினம், நில எடுப்பு தாசில்தார் உமா பரமேஸ்வரி, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தினேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது இந்த புறவழிச்சாலை அமைப்பதன் மூலம் அன்னூரில் இருந்து கோவை செல்ல 6 கிலோமீட்டர் தூரம் குறையும். கையகப் படுத்தும் இடங்களுக்கு அரசின் மதிப்பைக் காட்டிலும் இருமடங்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
அதை ஏற்க மறுத்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். மேலும் விவசாய நிலங்களை கொடுக்க நாங்கள் தயாராக இல்லை என்று கூறினர்.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் தங்கள் மேல் அதிகாரிகளிடம் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் முடிவு செய்யப்படும் என்று கூறியதால் அவர்கள் கலைந்து சென்றனர்.