சேலத்தில் துணிகரம்:தனியார் கல்லூரி விரிவுரையாளர் வீட்டில் பணம், மடிக்கணினி திருட்டு-மர்ம நபர் கைவரிசை

சேலத்தில் தனியார் கல்லூரி விரிவுரையாளர் வீட்டில் பணம், மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்றார்.

Update: 2021-07-20 14:39 GMT
சேலம்:
சேலத்தில் தனியார் கல்லூரி விரிவுரையாளர் வீட்டில் பணம், மடிக்கணினி, செல்போன் ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்றார்.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கல்லூரி விரிவுரையாளர்
சேலம் செல்லக்குட்டிக்காடு எட்டு முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயபாரதி (வயது 29). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். விஜயபாரதி நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். அப்போது வீட்டின் கதவை அவர் பூட்டவில்லையாம்.
இரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், அங்கிருந்த ரூ.50 ஆயிரம், மடிக்கணினி, 3 செல்போன்கள் ஆகியவற்றை திருடி சென்று விட்டான். நேற்று காலை பணம் உள்ளிட்டவை திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயபாரதி அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
கண்காணிப்பு கேமரா
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் விரிவுரையாளர் வீட்டுக்குள் புகுந்து இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்