கலெக்டர் ஆய்வு

பொங்கலூர் ஒன்றிய பகுதியில் நுண்ணீர் பாசன திட்டங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2021-07-20 13:18 GMT
திருப்பூர்
பொங்கலூர் ஒன்றிய பகுதியில் நுண்ணீர் பாசன திட்டங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ரூ.16 கோடியே 38 லட்சம்
பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பொங்கலூர், பெருந்தொழுவு, தொங்குட்டிபாளையம், அவினாசிபாளையம் மற்றும் காட்டூர் பகுதிகளில் வேளாண்மை துறையின் சார்பில் பாசன நீர் பயன்பாட்டு அளவை குறைத்து மகசூலை பெருக்கும் வகையில் நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து கலெக்டர் வினீத் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது
திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் வேளாண்மை பயிர்களில் 2,800 ஏக்கர் பரப்பளவில் நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.16 கோடியே 38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத்திட்டத்தில் சொட்டுநீர்ப்பாசனம், தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மழைத்தூவுவான் கருவிகள் மானியத்தில் வழங்கப்படுகிறது.
100 சதவீத மானியம்
மக்காச்சோளம், கரும்பு, தென்னை போன்ற பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம், நிலக்கடலை மற்றும் பயிறு வகைகளுக்கு தெளிப்பு நீர் பாசன கருவிகள் அமைக்கலாம். 5 ஏக்கர் பரப்பளவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், 12.50 ஏக்கர் வரை உள்ள மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. நுண்ணீர் பாசன முறையில் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பில் சாகுபடி செய்யலாம். இதனால் உரச்செலவும் குறைகிறது.
மின்மோட்டார் மற்றும் டீசல் பம்பு செட் அமைக்க 50 சதவீத மானியம், குழாய் அமைக்க ஒரு ஏக்டருக்கு ரூ‌.10 ஆயிரம் மானியமும், தரை நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க ரூ.40ஆயிரம் மானியமும் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கலாம்
இந்தத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், நில வரைபடம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்க நகல், சிறு, குறு விவசாயிகள் சான்று மற்றும் புகைப்படம் ஆகியவற்றை அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் மூலம் அதன் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து விவசாயிகளை சந்தித்து கலெக்டர் கருத்துக்களை கேட்டறிந்தார். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையால் காய்கறிப்பயிர்களின் உற்பத்தியை பெருக்க அமைக்கப்பட்ட காய்கறி பந்தல் மற்றும் நீர்ப்பாசனத்திட்டங்களையும், வேளாண் பொறியியல் துறையில் எந்திர மயமாக்கலை ஊக்குவிக்கும் வகையில் தொங்குட்டிபாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்ட வாடகை எந்திர மையத்தையும், பண்ணைக்குட்டை நீர்த்தேக்க பயன்பாட்டையும், பெருந்தொழுவு ஊராட்சியில் விவசாயிகளுக்கு கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் களையெடுப்பு கருவிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை மகாதேவன், பொங்கலூர் வட்டார வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலைத்துறையினர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.



மேலும் செய்திகள்