நவீன டி.வி.யை லஞ்சமாக பெற்ற காவலர் பணியிடை நீக்கம்

இன்ஸ்பெக்டர் பெயரை பயன்படுத்தி நவீன டி.வி.யை லஞ்சமாக பெற்ற சத்துவாச்சாரி காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-07-20 13:11 GMT
வேலூர்

இன்ஸ்பெக்டர் பெயரை பயன்படுத்தி நவீன டி.வி.யை லஞ்சமாக பெற்ற சத்துவாச்சாரி காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மணல் கடத்தல்

வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாட்டுவண்டி மற்றும் மோட்டார்சைக்கிளில் மர்மநபர்கள் மணல் கடத்தி வருகின்றனர். 

மணல் கடத்துபவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். எனினும் மணல் கடத்தும் கும்பலிடம் இருந்து போலீசார் லஞ்சமாக பணம் வாங்கிக்கொண்டு கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இன்ஸ்பெக்டர் கருணாகரன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். 

அப்போது மணல் கடத்திய நபரை பிடித்து விசாரணை செய்தார். அந்த நபர், தங்களுக்கு நவீன டி.வி.யை இலவசமாக வழங்கியது நான். என்னை விட்டு விடுங்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேமடைந்த இன்ஸ்பெக்டர் தீவிர விசாரணை நடத்தினார்.

டி.வி.யை லஞ்சமாக...

அதில், சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் முதல் நிலை காவலரான தினகரன் என்பவர் அந்த மணல் கடத்தல்காரரிடம் உன்னை கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் நவீன டி.வி. ஒன்று போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வாங்கி கொடுக்க வேண்டும். வாங்கி கொடுத்தால் உன்னை கைது செய்யாமல் விட்டுவிடுவார் என்று கூறியதாக தெரிகிறது. 

இதையடுத்து மணல் கடத்தல்காரர் லஞ்சமாக டி.வி.யை வாங்கி தினகரனிடம் கொடுத்துள்ளார். அவர் அந்த டி.வி.யை தனது வீட்டுக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்தநிலையில் தினகரனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டார்.

வேலூர் மாவட்டத்தில் மணல் கடத்தல் கும்பலுக்கு போலீஸ்காரர்கள் உடந்தையாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

----
Reporter : T. ALWIN_Staff Reporter  Location : Vellore - VELLORE

மேலும் செய்திகள்