கோவிலில் கிடந்த 3 மாத ஆண் குழந்தை

ஆரணியில் உள்ள கோவிலில் 3 மாத ஆண் குழந்தையை விட்டு சென்றுள்ளனர். அவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-07-20 12:35 GMT
ஆரணி

ஆரணியில் உள்ள கோவிலில் 3 மாத ஆண் குழந்தையை விட்டு சென்றுள்ளனர். அவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 மாத ஆண் குழந்தை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆரணிபாளையம் காந்தி ரோட்டில் உள்ள சின்ன மாரியம்மன் கோவிலில் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் நவக்கிரக சன்னதி அருகில் சுமார் 3 மாத ஆண் குழந்தையை புத்தம் புதிய உடைகள் அணிவித்து விட்டுச் சென்றுள்ளனர்.

நீண்டநேரம் ஆகியும் குழந்தையை யாரும் தூக்க வராததால் கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்கள் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரகு, ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகின், முத்துலட்சுமி ஆகியோர் கோவிலுக்குச் சென்று அங்கு கிடந்த ஆண் குழந்தையை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பு

குழந்தை நன்றாக ஆரோக்கியமாக இருந்தது. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் காப்பகத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

குழந்தையை விட்டுச் சென்றது யார், ஏன் விட்டுச் சென்றார், குழந்தையை கடத்தி வந்து விட்டு சென்றார்களா?, கள்ள உறவில் பிறந்த குழந்தையா அல்லது வறுமையின் கொடுமையால் விட்டுச் சென்றாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்