வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் வாலிபர் கைது

தமிழக-கேரள எல்லையில் வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.

Update: 2021-07-20 12:08 GMT
கூடலூர்:

துப்பாக்கிச்சூடு

தேனி மாவட்டம் கூடலூர் அருகே, தமிழக-கேரள மாநில எல்லையில் செல்லார்கோவில் மெட்டு வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் கம்பம் மேற்கு வனவர் இளவரசன் தலைமையில் வனக்காவலர் காஜாமைதீன், வனக்காப்பாளர்கள் ஜெயக்குமார், மனோஜ்குமார், மகாதேவன் ஆகியோர் கடந்த மாதம் 30-ந்தேதி இரவு ரோந்து சென்றனர். 

அப்போது, செல்லார்கோவில் பகுதியில் 5 பேர் பதுங்கி இருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது, அந்த கும்பலில் ஒருவர் திடீரென வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

 தேடுதல் வேட்டை

இதற்கிடையே அவர்களை பிடிக்க முயன்ற வனக்காவலர் காஜாமைதீன் என்பவரை அரிவாளால் வெட்டிவிட்டு 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
தமிழக-கேரள மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து  கூடலூர் தெற்கு போலீஸ் நி்லையத்தில், கம்பம் மேற்கு வனவர் லியாகத் அலிகான் புகார் செய்தார். அதன்பேரில் தப்பி ஓடிய 5 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

வனத்துறையினரோடு நக்சல் தடுப்பு பிரிவு போலீசாரும் பல்வேறு குழுக்களாக பிரிந்து வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

 ஏலக்காய் தோட்டங்களில் விசாரணை

இதற்கிடையே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய 2 பேரை வனத்துறையினர் அப்பகுதியில் அடிக்கடி பார்த்திருப்பதாக தெரிவித்தனர். அடையாளம் தெரிந்த, பெயர் விலாசம் தெரியாத அந்த நபர்கள் குறித்த விசாரணை முடுக்கி விடப்பட்டது.

குறிப்பாக அப்பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டங்களில் வனத்துறையினருடன் இணைந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். 

அப்போது, செல்லார்ேகாவில் பகுதியில் ஏலக்காய் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்திருந்த சோஜன் (வயது 34) என்பவர், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த நாளில் இருந்து தலைமறைவாக இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

சோஜனின் சொந்த ஊர், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் ஓடைமேடு அருகே உள்ள குழிப்பாலை என்னும் கிராமம் ஆகும். அவரை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

ஓசூருக்கு தப்பி செல்ல திட்டம்

இந்தநிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த சோஜன், தனது சொந்த ஊரில் இருந்து தப்பி செல்ல முடிவு செய்தார். பிளஸ்-2 முடித்துள்ள சோஜன், தர்மபுரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏற்கனவே பணிபுரிந்து வந்தார்.

பின்னர் அவர், அந்த வேலையை விட்டு விட்டு சொந்த ஊருக்கு வந்தார். அதன்பிறகு ஏலக்காய் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயத்தில் ஈடுபட்டார். போலீசார் தேடுவதால் மீண்டும் அவர் ஓசூருக்கு தப்பி செல்ல திட்டமிட்டார்.

வாலிபர் கைது 

ஓசூர் செல்வதற்கு பஸ் ஏறுவதற்காக, லோயர்கேம்ப் பஸ் நிறுத்தத்தில் சோஜன் நின்று கொண்டிருந்தார். இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கூடலூர் தெற்கு போலீசார் மற்றும் நக்சல் தடுப்பு போலீசார் அங்கு விரைந்து சென்று சோஜனை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவலை அவர் வெளியிட்டார்.

மான் வேட்டை

அதாவது, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வனப்பகுதியில் சோஜன் வேட்டையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அதன்படி சம்பவ நாளில், மான் வேட்டையாடுவதற்காக துப்பாக்கியுடன் தனது கூட்டாளிகள் 4 பேருடன் செல்லார்கோவில் வனப்பகுதிக்கு சோஜன் வந்தார்.

அப்போது வனத்துறையினர் தங்களை பிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் தப்பி சென்று விட்டதாக தெரிவித்தார். 

 4 பேருக்கு வலைவீச்சு

வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்?, வனக்காவலர் காஜாமைதீனை அரிவாளால் வெட்டிய நபர் குறித்த தகவலையும் அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சோஜன் அளித்த தகவலின்பேரில், தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
--------

மேலும் செய்திகள்