தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த மாத இறுதிக்குள் 18 ஆயிரம் மீனவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த மாத இறுதிக்குள் 18 ஆயிரம் மீனவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த மாத இறுதிக்குள் 18 ஆயிரம் மீனவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
தடுப்பூசி முகாம்
தூத்துக்குடி மில்லர்புரம் பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் வரவேற்று பேசினார்.
முகாமில் திரளான ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோவுடன் முகாமுக்கு வந்து, தடுப்பூசி போட்டுக் கொண்டு புறப்பட்டு சென்றனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை சுமார் 3 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. கொரோனா 3-வது அலை வந்தாலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதனால் மக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளில் பணிபுரிபவர்கள் மற்றும் மக்களின் தொடர்பு அதிகம் உள்ள பணிகளை மேற்கொள்பவர்களை கண்டறிந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. ஆட்டோ டிரைவர்கள் தங்களது ஆட்டோவிலேயே வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டு சிறிது நேரம் மருத்துவர் கண்காணிப்பில் இருந்துவிட்டு தங்களது பணிகளை தொடரலாம்.
18 ஆயிரம் மீனவர்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்று ஒவ்வொரு பிரிவினரும் கண்டறியப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது. குறிப்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் பணிபுரியும் 210 நபர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 100 சதவீதம் ஆட்டோ டிரைவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகளும் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 18 ஆயிரம் மீனவர்களுக்கும் இந்த மாத இறுதிக்குள் தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மீனவர் குடியிருப்பு பகுதியிலும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதே போன்று பாக்கெட் போடும் பணியாளர்கள், செய்தித்தாள் வினியோகம் செய்பவர்கள், மக்களை அதிகமாக தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு தடுப்பூசி போடுவதால் 3-வது அலை வந்தாலும் அதிக பரவல் இன்றி தடுக்கப்படும். நமது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 14 லட்சம் பேர் உள்ளனர். இதில் 3 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. மீதம் உள்ளவர்களுக்கும் தடுப்பூசிகள் வரவர போடப்பட்டு வருகிறது. அனைவரின் ஒத்துழைப்புடன் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா, மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா, போக்குவரத்து ஆய்வாளர் பெலிக்ஸ் மாசிலாமணி, தாசில்தார் ஜஸ்டின், பி.எம்.சி. பள்ளி முதல்வர் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.