பள்ளிபாளையம் அருகே, வேலை தருவதாக கூறி வட மாநிலத்தவர்களிடம் பணம், செல்போன் பறித்த 4 பேர் கைது
பள்ளிபாளையம் அருகே வேலை தருவதாக கூறி வட மாநிலத்தவர்களிடம் பணம், செல்போன் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளிபாளையம்,
பள்ளிபாளையம் அருகே மொளசி அம்மாசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 56). இவருடைய மகன் பிரகாஷ் (28). இவர்கள் ரிக் லாரி வைத்து தொழில் செய்து வந்தனர். இவர்களுடைய லாரியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ராகுல் (35), ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சமீர் (40) ஆகியோர் டிரைவர்களாக வேலை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் இவர்கள் 4 பேரும் சேர்ந்து மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த தாகர் மண்டேல் (45), கோரா (43), பார்பயன் (40) ஆகிய 3 பேரையும் வேலை தருவதாக கூறி அழைத்தனர். அதனை நம்பி இங்கு வந்த அவர்களிடம் ரவி உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து மிரட்டி அவர்கள் வைத்திருந்த செல்போன்கள் மற்றும் ரூ.16 ஆயிரத்தை பறித்து கொண்டு துரத்தி விட்டனர்.
இதையடுத்து 3 பேரும் மொளசியில் தங்களுக்கு தெரிந்த ஒருவர் மூலம் இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர் சதாசிவம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வடமாநிலத்தவர்களிடம் பணம், செல்போன் பறித்த ரவி, பிரகாஷ் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.