கோவை சி.எஸ்.ஐ. திருச்சபை கூட்டத்தில் கோஷ்டி மோதல்

கோவையில் சி.எஸ்.ஐ. திருச்சபை நிர்வாகக்குழு கூட்டத்தில் இருதரப்பு இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-07-19 21:57 GMT
கோவை

கோவையில் சி.எஸ்.ஐ. திருச்சபை நிர்வாகக்குழு கூட்டத்தில் இருதரப்பு இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோஷ்டி மோதல்

கோவை ரேஸ்கோர்சில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சி.எஸ்.ஐ. திருச்சபை நிர்வாக குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பிஷப் திமோத்தி ரவீந்தர் தலைமை தாங்கினார். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கூட்டத்தில் சிலர் ஆன்லைன் மூலமும் பங்கேற்றனர்.

இந்த நிலையில் கூட்டம் தொடங்கிய சில மணி நேரத்தில் இரு தரப்புக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கோஷ்டி மோதலாக மாறியது. இதனால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். 

தலையில் காயம்

இந்த மோதலில் ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் பீறிட்டு வெளியேறியது. அவரை அங்குள்ளவர்கள்  மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இதற்கிடையே இருதரப்பினரும் மோதும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்