திருமணமான பின்பும் காதல் தொல்லை; இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

பெலகாவியில் இளம் பெண்ணுக்கு திருமணமான பின்பும் காதலிப்பதாக கூறி வாட்ஸ்அப்பில் பதிவு செய்திருந்ததால் அந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வாலிபரும் தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2021-07-19 21:45 GMT
பெலகாவி: பெலகாவியில் இளம் பெண்ணுக்கு திருமணமான பின்பும் காதலிப்பதாக கூறி வாட்ஸ்அப்பில் பதிவு செய்திருந்ததால் அந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வாலிபரும் தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இளம்பெண் தற்கொலை

பெலகாவி மாவட்டம் பைலஒங்களா அருகே சுதஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் அக்‌ஷிதா பூஜாரி(வயது 24). இவருக்கும், பக்கத்து கிராமத்தில் வசிக்கும் நாகராஜ் என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்திருந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்‌ஷிதா, தனது கணவர் வீட்டில் இருந்து சுதஹட்டி கிராமத்தில் வசிக்கும் பெற்றோரை பார்க்க வந்திருந்தார். அங்கேயே கடந்த சில நாட்களாக அவர் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்(26) என்பவர், அக்‌ஷிதாவை காதலிப்பதாகவும், அவர் இல்லை எனில் தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறி தனது வாட்ஸ்-அப் ஸ்டேசசில் பதிவு செய்திருந்ததுடன், அக்‌ஷிதாவின் புகைப்படத்தையும் வைத்திருந்தார். இதனை சந்தோசின் நண்பர்கள், தோழிகள் பார்த்து, அக்‌ஷிதாவிடம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து அக்‌ஷிதா குடித்து விட்டு தற்கொலை செய்தார்.

தற்கொலைக்கு முயன்ற வாலிபர்

இந்த நிலையில், வெளியே சென்றிருந்த அக்‌ஷிதாவின் பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய போது தங்களது மகள் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த கதறி அழுதனர். இதுபற்றி அறிந்ததும் பைலஒங்களா போலீசார் விரைந்து வந்து அக்‌ஷிதாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அக்‌ஷிதாவுக்கு திருமணம் நடந்து கணவருடன் வாழ்ந்து வந்த போது, அவரை காதலிப்பதாக கூறி சந்தோஷ் தனது வாட்ஸ்-அப்பில் புகைப்படம் வைத்து, பதிவு செய்திருந்ததால் தற்கொலை முடிவை எடுத்தது தெரியவந்தது.

ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அக்‌ஷிதா, சந்தோஷ் காதலித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், சந்தோசும் விஷத்தை குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பைலஒங்களா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்