ஈரோடு மாவட்டத்தில் 23 ஆயிரத்து 890 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்ச்சி; மதிப்பெண்களை செல்போன்களில் பார்த்து மகிழ்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் 23 ஆயிரத்து 890 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றனர். மதிப்பெண் பட்டியலை செல்போன் மூலம் பார்த்து மாணவ- மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-07-19 21:41 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 23 ஆயிரத்து 890 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றனர். மதிப்பெண் பட்டியலை செல்போன் மூலம் பார்த்து மாணவ- மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பிளஸ்-2 தேர்ச்சி
தமிழ்நாட்டில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020- 2021 கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்கள் இயங்கவில்லை. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு மட்டும் கடந்த கல்வி ஆண்டில் ஓரிரு மாதங்கள் நடந்தன.  ஆனால் கொரோனா 2-ம் அலை காரணமாக வகுப்புகள் முற்றிலும் தடை செய்யப்பட்டன.
எனவே ஆன்லைன் வகுப்புகள், வாட்ஸ்அப் வகுப்புகள் மூலமாகவே பிளஸ்-2 வகுப்புகளுக்கு பாடங்கள் எடுக்கப்பட்டன. இந்தநிலையில் தமிழகத்தில் பிளஸ்-2 தவிர்த்து அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்து இருந்தது. எனவே பிளஸ்-2 வகுப்புகளுக்கு தேர்வு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிளஸ்-2 வகுப்புகளுக்கும் தேர்வு இல்லை என்றும் அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி அடைவதாகவும் அறிவித்தார்.
மதிப்பெண்
அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண்கள் அளிக்க கல்வித்துறை அதிகாரிகள் வழிகாட்டு முறைகளை வெளியிட்டனர். அதன் அடிப்படையில் 10-ம் வகுப்பு மதிப்பெண்ணில் 50 சதவீதம், பிளஸ்-1 வகுப்பு மதிப்பெண்ணில் 20 சதவீதம் மற்றும் பிளஸ் -2 வகுப்பில் உள்மதிப்பீடு மற்றும் செய்முறை தேர்வுகள் அடிப்படையில் 30 சதவீதம் என மதிப்பெண்கள் அளிக்கப்பட்டன.
இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. ஏற்கனவே அனைவரும் தேர்ச்சி என்பது உறுதியாகிவிட்டாலும், மதிப்பெண்களை அறிந்து கொள்ள மாணவ- மாணவிகள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். பிளஸ்-2-வுக்கு பிறகு உயர் கல்விக்கு இந்த மதிப்பெண்கள் மிகவும் அத்தியாவசியம் என்பதால் மாணவ- மாணவிகளின் பெற்றோரும் தங்கள் மகன்- மகள்களின் மதிப்பெண்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர்.
மகிழ்ச்சி
தேர்வு முடிவுகள் அறிவிப்பை முன்னிட்டு ஈரோட்டில் உள்ள பல்வேறு பள்ளிக்கூடங்களிலும் ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்திருந்தனர். ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் படித்த மாணவிகள் பள்ளிக்கூட வளாகத்தில் காத்து இருந்தனர். தேர்வு முடிவுகள் வெளிவந்து மதிப்பெண்களை பார்த்ததும் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அன்பில் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து மாணவ- மாணவிகளின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்களில் மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதுதவிர இணையதளங்கள் வாயிலாக மாணவ-மாணவிகள் தங்கள் செல்போன்களிலேயே மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யும் வசதியும் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி பகல் 11.30 மணி அளவில் அனைத்து மாணவ- மாணவிகளும் தங்கள் மதிப்பெண்களை தெரிந்து கொண்டனர்.
23 ஆயிரத்து 890 பேர்
ஈரோடு மாவட்டத்தில் 98 அரசு பள்ளிக்கூடங்கள், 6 மாநகராட்சி-நகராட்சி பள்ளிக்கூடங்கள், 12 நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்கள், 2 நலத்துறை பள்ளிக்கூடங்கள், 77 மெட்ரிக் பள்ளிக்கூடங்கள், 22 சுய நிதி பள்ளிக்கூடங்கள் என 217 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 23 ஆயிரத்து 890 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 படித்து வந்தனர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்தனர். மாணவர்கள் 11 ஆயிரத்து 278 பேரும், மாணவிகள் 12 ஆயிரத்து 612 பேரும் தேர்ச்சி அடைந்தனர். அரசு, நிதி உதவி, மாநகராட்சி, நலத்துறை என அரசு சார்ந்த பள்ளிக்கூடங்களை பொறுத்தவரை 13 ஆயிரத்து 646 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.
ஈரோடு கல்வி மாவட்டத்தில் மொத்தம் 75 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 8 ஆயிரத்து 712 பேரும், பெருந்துறை கல்வி மாவட்டத்தில் 29 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 905 பேரும் தேர்ச்சி அடைந்தனர். பவானி கல்வி மாவட்டத்தில் 40 பள்ளிக்கூடங்களில் படித்த 5 ஆயிரத்து 137 பேரும், கோபி கல்வி மாவட்டத்தில் 43 பள்ளிக்கூடங்களில் படித்த 4 ஆயிரத்து 107 பேரும், சத்தியமங்கலம் கல்வி மாவட்டத்தில் 30 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 29 மாணவ- மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் தேர்வு முடிவுகள் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். ஈரோடு அரசு மாதிரி மகளிர் பள்ளிக்கூடத்தில் மாணவிகளை பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சுகந்தி வாழ்த்தினார்.

மேலும் செய்திகள்