தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் மனு

தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2021-07-19 21:20 GMT
ஈரோடு
தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
மணல் குவாரிகள்
ஈரோடு மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் சங்க நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்பு, தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் அரசு மணல் குவாரிகள் இயக்கப்பட்டு வந்தன. கட்டுமான பணிகளுக்கு தேவையான மணல், தட்டுப்பாடின்றி ஒரு யூனிட் ரூ.1,300 வீதம் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு லாரி வாடகையுடன் சேர்த்து ரூ.3 ஆயிரத்து 500-க்கு கிடைத்தது. இந்த தொழிலை நம்பி மாநிலம் முழுவதும் 55 ஆயிரம் லாரிகள் உள்ளன. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வாழ்வாதாரமாக இந்த தொழில் இருந்தது.
தட்டுப்பாடு
கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இணையதளம் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு நேரடியாக மணல் வினியோகம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திற்கு தினமும் குறைந்தபட்சம் 60 ஆயிரம் யூனிட் மணல் தேவைப்படுகிறது. 2017-ம் ஆண்டு முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை 4 ஆண்டுகளில் 6 குவாரிகள் மட்டுமே இயக்கப்பட்டன. அதன்மூலம் தினமும் 2 ஆயிரத்து 500 யூனிட் மணல் மட்டுமே வழங்கப்பட்டது.
மணல் தட்டுப்பாட்டை பயன்படுத்தி, அனுமதியின்றி ஆறுகளில் திருட்டு மணல் எடுத்து யூனிட் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனர். கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து ஒரு யூனிட் மணல் ரூ.8 ஆயிரத்துக்கு வாங்கி தமிழகத்தில் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனர். மணல் தட்டுப்பாடு மற்றும் கடும் விலை உயர்வால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திறக்க நடவடிக்கை எடுக்க...
மணல் லாரிகள், லோடு இல்லாததால், நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனுக்கு தவணைத் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் உள்ளனர். மணல் தட்டுப்பாட்டை தவிர்த்திட நிறுத்தி வைக்கப்பட்ட மணல் குவாரிகளை உடனடியாக இயக்க வேண்டும். திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்களில், காவிரி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள ஆறுகளிலும், புதிய மணல் குவாரிகளை திறக்க தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்