போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு

போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு கொடுத்தனர்.

Update: 2021-07-19 19:46 GMT
நெல்லை:
போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு கொடுத்தனர்.

ஆஸ்பத்திரி பணியாளர்கள்

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்த தற்காலிக பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அங்குள்ள பெட்டியில் மனு போட்டனர்.
அதில், நாங்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படைடயில் தனியார் நிறுவனம் மூலம் வேலைக்கு சேர்ந்தோம். கடந்த 1 ஆண்டாக கொரோனா காலத்தில் பணிபுரிந்து உள்ளோம். இந்த நிலையில் தற்போது ஒப்பந்தம் முடிந்து விட்டதால் வேலைக்கு வரவேண்டாம் என்று அனுப்பி விட்டார்கள். எனவே எங்களுக்கு நிரந்தர பணி வாய்ப்பு வழங்க வேண்டும்’’ என்று கூறிஉள்ளனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாய சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜகுரு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மாயகிருஷ்ணன், செயலாளர் செல்லத்துரை ராதாபுரம் இருக்கன்துறை பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
ராதாபுரம் தாலுகா இருக்கன்துறை பஞ்சாயத்திற்குட்பட்ட சூட்சிகுளம், ஊரல் வாய்மொழி, கீழ்குளம், பொன்னார்குளம் கல்யாணி நகர் உட்பட சுமார் 13 கிராமங்களை சுற்றியுள்ள கல்குவாரிகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலத்தடி நீர் பாதித்து அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் விளைச்சல் இல்லாமல் விவசாயிகள் கடும் நெருக்கடிகளை சந்திக்கின்றனர். கல்குவாரியில் போடப்படும் வெடிகளின் அதிர்வால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. கல்குவாரிகளுக்கு வரும் லாரிகளால் அந்த பகுதி சாலைகள் பழுதடைந்து விட்டது. எனவே இந்த கல்குவாரிகளின் உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாஞ்சோலை போராளிகள் பாலம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், ‘‘1999-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந்தேதி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நடத்திய ஊர்வலத்தில் போலீசார் நடத்திய தடியடியால் 17 பேர் உயிரிழந்தனர். இவர்களது நினைவாக தாமிரபரணி ஆற்றங்கரையில் நினைவு தூண் அமைக்க அனுமதி வழங்க வேண்டும். நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்ற மறுத்து வருவதால், தற்போது கொக்கிரகுளத்தில் போராளிகள் பலியான இடத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஆற்றுப்பாலத்துக்கு மாஞ்சோலை போராளிகள் நினைவு பாலம் என பெயர் சூட்ட வேண்டும்’’ என்று கூறிஉள்ளார்.

பொது வழிபாதை

பூர்வீக தமிழர் கட்சி நெல்லை மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் மாரியப்பன் மற்றும் லெனின் உள்ளிட்டோர் மூலைக்கரைப்பட்டி பகுதி மக்களுடன் வந்து கொடுத்த மனுவில், ‘‘மூலைக்கரைப்பட்டி ஆதிதிராவிடர் தெருவில் புதிரை வண்ணார், பள்ளர், குறவர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த காட்டு நாயக்கர் போன்ற சமூக மக்கள் 30 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையால் வழங்கப்பட்ட பாதையை பயன்படுத்த முடியாமல் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுப்பாதை தடுப்பு சுவரை அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்’’ என்று கூறிஉள்ளனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணை செயலாளர் உமர் தலைமையில் கோபாலசமுத்திரம் கிராம மக்கள் திரண்டு வந்து புகார் மனு கொடுத்தனர். அதில் ‘‘கோபாலசமுத்திரம் பகுதியில் மருத்துவம் படிக்காதவர்கள் போலியாக ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி உள்ளனர்.
இதேபோல் பல்வேறு தரப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுத்தனர்.

மேலும் செய்திகள்