பட்டா இருக்கு இடத்தை காணோம் என புகார் அளித்த மக்கள்

வடிவேலுவின் கிணற்றை காணோம் என்ற காமெடி பாணியில் அரசு வழங்கிய பட்டா உள்ளது, இடத்தை காணோம் என ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு கிராம மக்கள் திரளாக வந்து மனு அளித்தனர்.

Update: 2021-07-19 18:44 GMT
ராமநாதபுரம், 
ஜூலை.
வடிவேலுவின் கிணற்றை காணோம் என்ற காமெடி பாணியில் அரசு வழங்கிய பட்டா உள்ளது, இடத்தை காணோம் என ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு கிராம மக்கள் திரளாக வந்து மனு அளித்தனர்.
200 பேருக்கு பட்டா
திருவாடானை தாலுகா, ஏ.மணக்குடி தி.மு.க. கிளை செயலாளர் இளங்கோவன் தலைமையில் ஏராளமானோர் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2007-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ஏ.மணக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நிலமற்ற ஏழை, எளிய மக்கள் 200 பேருக்கு நிலம் தேர்வு செய்து பட்டா வழங்கப்பட்டது. இந்த பட்டாக்குரிய நிலத்தை உட்பிரிவு செய்து அளந்து கொடுக்காமலும், கணினியில் பதிவேற்றம் செய்யாமலும் உள்ளது. 
இது குறித்து பல முறை மனு கொடுத்தும் உரியவர்களுக்கு பட்டாக்குரிய நிலத்தை ஒதுக்கீடு செய்து வழங்காமல் உள்நோக்கத்துடன் காலதாமதம் செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த நிலத்தை சிப்காட் நிறுவனத்திற்கும், தனியாருக்கும் விற்பனை நிலமாக மாற்றி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒப்படைக்க வேண்டும்
அரசால் நில ஒப்படைப்பு செய்து பட்டா வழங்கிய நிலையில், பட்டா உள்ளது அதற்கான இடம் இல்லை என்று கிணற்றை காணோம் காமெடி பாணியில் இந்த பட்டா பெற்ற மக்களின் நிலை உள்ளது. எனவே உடனடியாக அரசு அந்த நிலத்தினை அளந்து கணினியில் பதிவேற்றம் செய்து பட்டா வைத்துள்ள எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். 
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்