குடும்ப பிரச்சினை காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

குடும்ப பிரச்சினை காரணமாக 2 குழந்தைகளுடன் பெண் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-07-19 18:20 GMT
புதுக்கோட்டை:
2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்தவர் வெண்ணிலா. இவர், நேற்று தனது 2 குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது கேனில் மறைத்து  வைத்திருந்த மண்எண்ணெய் எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த திருக்கோகர்ணம் போலீசார் உடனடியாக மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்து காப்பாற்றி, அவரிடம் விசாரணை நடத்தினர். 
விசாரணையில் வெண்ணிலா போலீசாரிடம் கூறியதாவது:- எனது கணவர் குடும்ப தகராறு தன்னையும், தனது குழந்தைகளையும் பார்க்க வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். இதனை தட்டிக்கேட்டதால் கணவர் குடும்பத்தார் என்னை அடித்து வீட்டை விட்டு விரட்டினர். 
பரபரப்பு 
இதனால் நான் அறந்தாங்கி அருகே உள்ள எனது சகோதரர் வீட்டிற்கு சென்று விட்டேன். இந்நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு வந்தும் என்னை அடித்ததால் அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அதன்பேரில், அறந்தாங்கி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கணவன் குடும்பத்தினர் சமாதானமாக செல்கின்றோம் என்று கூறிவிட்டு மீண்டும் தன்னையும், தன் குழந்தைகளையும் அடித்து விரட்டினர் என்று கூறினார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பெண், தனது 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்