சேந்தன்குடி கிராமத்தில் நீதிமன்ற உத்தரவின்படி குளத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது

சேந்தன்குடி கிராமத்தில் ஆவுடையாணி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் நீதிமன்றம் உத்தரவுப்படி அகற்றப்பட்டது.

Update: 2021-07-19 18:14 GMT
கீரமங்கலம்:
நீர்நிலை ஆக்கிரமிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கிராமங்களில் மழைத்தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்தக்கூடிய ஏராளமான ஏரி, குளம், குட்டைகள் உள்பட காட்டாறுகளும் ஆக்கிரமிப்புகளால் நீர் நிலைகளின் பரப்பளவுகள் குறைந்து விட்டது. மேலும் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரும் வரத்து வாரிகளும் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போய்விட்டது.
இதனால் மழைத்தண்ணீர் நீர்நிலைகளில் தேங்காமல் வீணாகி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 500 முதல் ஆயிரம் அடிக்கு கீழே போய்விட்டது. அதனால் 1,100 அடி ஆழம் வரை ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
இந்த நிலையில் தான் கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தில் உள்ள ஆவுடையாணி குளத்தில் அதிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் குளத்தில் அளவு குறைந்திருந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சிலர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கு விசாரனைக்கு பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து நேற்று நீர்வள ஆதாரத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கீரமங்கலம் போலீசார் பாதுகாப்போடு பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். 
மேலும் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள மரங்களை அரசு கணக்கில் சேர்த்துக் கொண்டு இனிமேல் யாரும் ஆக்கிரமிப்பு செய்ய தடை விதித்து பதாகை வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறுகையில், ஆக்கிரமிப்புகளை அகற்றியது போல மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யாமல் தடுக்க முழுமையாக குளத்திற்கு கரை அமைத்து தர வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்