புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு மாணவர்கள் வரவேற்பு

பிளஸ்-2 தேர்வில் அனைவரும் தேர்ச்சிக்கும், புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கும் மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Update: 2021-07-19 17:44 GMT
கடலூர், 

கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு தேர்வு எழுதாமலேயே பிளஸ்-2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிப்புக்கு மதிப்பெண் கட்டாயம் என்பதால் முதல் முறையாக தசம எண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.  இந்த மதிப்பெண்கள் திருப்தி இல்லை என்றால் தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய நடைமுறையில் தேர்ச்சி பெற்றுள்ள கடலூர் மாவட்ட மாணவ-மாணவிகளில் சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதன் விவரம் வருமாறு:-
பரீட்சை எழுதாமலேயே தேர்ச்சி 
கடலூர் மாணவி யமுனாதேவி:-
பிளஸ்-2 வகுப்பு பாடத்தை பள்ளி சென்று படிக்க ஆர்வமாக இருந்தேன். ஆனால், கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்காத நிலையில், ஆன்லைன் மூலமே பாடங்களைப் படித்தோம். பாடம் எடுத்த ஆசிரியைகள், பொதுத்தேர்வு கண்டிப்பாக நடக்கும் என்று கூறியே எங்களுக்குப் பாடம் நடத்தினார்கள். நாங்களும் அதற்கு ஏற்ற வகையிலேயே படித்தோம். ஆனால் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. பரீட்சை எழுதாமலேயே நாங்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறோம்.
பிளஸ்-2 தேர்வு முடிவு திருப்தி அளிக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால் கொரோனா பரவல் நேரத்தில் வேறு வழியில்லை. நான் தற்போது 600-க்கு 529 மதிப்பெண்கள் எடுத்து உள்ளேன். ஆனால் தேர்வு எழுதி இருந்தால் 550 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து இருப்பேன். தற்போது நீட் தேர்வு எழுத ஆயத்தமாகி வருகிறேன். இதனால் என்னால் மீண்டும் தேர்வு எழுத முடியாது. ஏற்கனவே தேர்வு நடந்து இருந்தால் மதிப்பெண்கள் அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக படித்து இருப்போம். 

திருப்தி அளிக்கிறது 

கடலூர் மாணவி ஹெஜின் பியாட்ரஸ்:-
எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்பதுதான் பெரும்பாலான மாணவ-மாணவிகளின் கருத்தாக இருக்கிறது. இருப்பினும் இந்த தேர்தல் முடிவு திருப்தி அளிக்கிறது. அரசின் புதிய நடைமுறையால், படிக்காத மாணவர்களே நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். நன்றாகப் படிக்கும் நாங்கள் இப்போது வருத்தப்படும் நிலைக்கு வந்திருக்கிறோம். பிளஸ்-2 திருப்புதல் தேர்வுகளை அடிப்படையாக வைத்து மதிப்பெண்கள் வெளியிட்டிருந்தால் நாங்கள் இன்னும் அதிக மதிப்பெண் பெற்றிருக்க முடியும்.  எப்படியாவது பொதுத்தேர்வு வைத்திருந்தால் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்க முடியும் என்பதே நன்கு  படிக்கக்கூடிய பெரும்பாலான மாணவ-மாணவர்களின் கருத்து ஆகும்.

மகிழ்ச்சி 

விருத்தாசலம் மாணவி ராகவி:-
தேர்வு முடிவு திருப்தியாக உள்ளது. எனக்கு இவ்வளவு மதிப்பெண் வரும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் நான் எதிர்பார்த்ததை விடவும் அதிக மதிப்பெண்கள் வந்திருக்கிறது. பள்ளிக்குச் செல்லாமல் இவ்வளவு மதிப்பெண்கள் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கொரோனாவால் 2 வருடம் வீணாகிவிட்டது. பள்ளிக்குச் சென்றிருந்தால் ஆசிரியர்கள் கற்பித்தலை புரிந்துகொண்டு இன்னும் நன்றாகப் படித்திருப்போம். நண்பர்களுடன் கலந்து ஆலோசித்திருப்போம். அதை தவறவிட்டுவிட்டோம்.

வரவேற்பு 

சிதம்பரம் மாணவர் வினோதன்:-
தமிழக அரசு அனைத்து பிளஸ்-2 மாணவர்களுக்கும் தேர்ச்சி என அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கொரோனா பயம் காரணமாக தேர்வு எழுதும் மனப்பான்மையில் பெரும்பாலான மாணவர்கள் இல்லை. தமிழக அரசு அளித்துள்ள மதிப்பெண்கள் சராசரியாக இருந்ததால் அனைத்து மாணவர்களுக்கும் ஏற்றாற்போல உள்ளது. தேர்வு வைத்திருந்தாலும் பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். இருந்தபோதிலும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற வைத்து சராசரி மதிப்பெண்களை அரசு வழங்கி இருப்பதை வரவேற்கிறேன்.

நன்றி 

வல்லம்படுகை மாணவி பிரியதர்ஷினி:-
கொரோனா காலமாக இருந்ததால் தேர்வுகள் நடக்காமல் தமிழக அரசு அறிவித்த புதிய நடைமுறையால் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. ஆனாலும் கிடைத்துள்ள மதிப்பெண்கள் மகிழ்ச்சி அளிக்கிறது. கடுமையாக படித்து தயாராக இருந்தேன். தேர்வு நடந்திருந்தால் இதைவிட அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பேன். பெரிய நிறுவனங்களை நடத்தக்கூடிய நிர்வாக செயல் அதிகாரியாக வர வேண்டும் என்பதே என் ஆசை.நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்தால் என்னை போன்ற அரசு பள்ளி மாணவிகளும் எளிதில் டாக்டராக முடியும். தற்போது மதிப்பெண்கள் வழங்கிய அரசுக்கு நன்றி. 

மேலும் செய்திகள்