ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் வாகனத்தை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை

வேப்பூரில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் வாகனத்தை உடைத்து 10 பவுன் நகையை கொள்ளையடித்த 3 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-07-19 17:24 GMT
வேப்பூர், 

வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 72). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவர் வேப்பூரில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 10 பவுன் நகையை அடகு வைத்திருந்தார். இந்த நகையை மீட்பதற்காக சுப்பிரமணியன் தனது மனைவி மலர்க்கொடியுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று மதியம் அந்த வங்கிக்கு சென்றார். 
வங்கியில் நகையை மீட்டு, அதனை சுப்பிரமணியன் தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்தார். பின்னர் கணவர்-மனைவி இருவரும் வேப்பூர் கூட்டுரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று, மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டனர். 

கொள்ளை 

அங்கு சுப்பிரமணியன் தனது மனைவியை இறக்கி விட்டு, மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அவர் மளிகை பொருட்களை வாங்கினார். 
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது மோட்டார் சைக்கிள் பெட்டி உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது. 

3 வாலிபர்களுக்கு வலைவீச்சு 

இது பற்றி தகவல் அறிந்தம் வேப்பூர் போலீசார் விரைந்து வந்து சுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அருகில் உள்ள செல்போன் கடையில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டனர். 
அதில், சுப்பிரமணியனை பின்தொடர்ந்து 25 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்ததும், அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மளிகை பொருட்கள் வாங்க சென்றபோது ஒரு வாலிபர், அவர் பின்னால் சென்று மறைத்தபடி நின்றதும், மற்ற 2 வாலிபர்கள் சுப்பிரமணியனின் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து 10 பவுன் நகையை கொள்ளையடித்ததும் தெரிந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி நகையை கொள்ளையடித்த கொள்யைளர்கள் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியில் இருந்த நகையை மீட்டு வந்ததை நோட்டமிட்டு வாலிபர்கள், கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

மேலும் செய்திகள்