தாராபுரம்
தாராபுரம் புதுக்கோட்டைமேட்டுத் தெருவில் பள்ளி அருகில் செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சப்கலெக்டர் ஆனந்த் மோகனிடம் மனு கொடுத்தனர்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது தாராபுரம் புதுக்கோட்டை மேட்டுத்தெருவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதன் அருகில் சந்தைப்பேட்டை நகராட்சி வணிக வளாகம், அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை அமைந்துள்ளது. இப்பகுதியில் செயல்படும் அரசு டாஸ்மாக் மதுக்கடை அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் டாஸ்மாக் கடை உள்ளது. அப்பகுதியில் மதுப்பிரியர்கள் மதுவை வாங்கிக் கொண்டு நகராட்சி வணிக வளாகத்தின் முன்பு அமர்ந்து கொண்டு இரவு 10 மணி வரை மது குடிக்கின்றனர். போதை தலைக்கேறியதும் ஏக வசனம் பேசி வருகின்றனர். இதனால் பணிக்குச் செல்லும் பெண்களும், மாணவ-மாணவிகளுக்கும் போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, பள்ளிக்கு அருகில் இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.